துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.
அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

No comments: