காங்.–பாஜக கட்சிகள் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டன: சீமான்
தேனி மாவட்டம் கம்பத்தில் நாம்தமிழர் கட்சி சார்பில் தேர்தல் நிலைபாடு என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா இரண்டுமே தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டன. முல்லை பெரியாறு அணையை உடைக்கும் முயற்சியை கேரள அரசு மேற்கொண்ட போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தது.
கேரளாவில் உள்ள பாரதீய ஜனதா கட்சியினரும் முல்லை பெரியாறு அணையை உடைப்பதற்கு ஆதரவு திரட்டினர். தமிழகத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் அதனை தட்டிக்கேட்கவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதனை காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதற்கு காங்கிரஸ் அரசு பணம், ஆயுதம் கொடுத்து உதவியது. எதிர்கட்சியான பா.ஜனதா வேடிக்கை பார்த்தது.
காங்கிரஸ் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு உதவியதை தட்டிக் கேட்டுகும் இடத்தில் இருந்த பாரதீய ஜனதா ஏன் கேட்கவில்லை சிந்தித்து பாருங்கள்.
மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் அதிகம் வாழும் இடுக்கி மாவட்டத்தை கேரளத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் இணைத்து தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. கூடங்குளம் அணுஉலை கழிவுகளை கொட்டுவதற்காக இங்கு இடம் தேர்வு செய்துள்ளனர். இது தமிழர்கள் வாழும் நாடா அல்லது தமிழர்களுக்கான சுடு காடா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
உங்கள் வாக்குகளை தமிழர் நலனுக்காக போராடியவர்களுக்கு அளிக்க வேண்டும். காங்கிரஸ், பா.ஜனதாவிற்கு ஓட்டுே பாடாதீர்கள். தமிழர்களின் உரிமைக்காக சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசு தீர்மானம் போட்டது.
ராஜீவ் கொலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அதனால் அ.தி.மு.கவின் செயல்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம். எனவே தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார்.

No comments: