ஒரு மாதம் ஆகிவிட்டது…. ஏக்கத்தில் உறவினர்கள்: மலேசிய விமானத்தின் கதை
செவ்வாய்க்கிழமை,
மலேசிய விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் பயணிகளுக்காக பிரார்த்தனை செய்தனர்.
மலேசிய விமானம்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த மார்ச் மாதம் 8ம் திகதியன்று 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய எம்ஹெச்370 என்ற விமானம் ஒரு மணி நேரத்திற்குள் ரேடாரிலிருந்து மாயமாய் மறைந்தது.
இதில் 153 பேர் சீனப் பயணிகள் ஆவர். விமானத்தைத் தேடும் முயற்சியிலும், அதன் கடைசி நிமிடப் பயணத் தொடர்புகளை அறிய உதவும் கறுப்புப் பெட்டி குறித்த தேடுதல் வேட்டையிலும் பல நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
இன்றுவரை தொடரும் மர்மம்
பல்வேறு நாடுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தாலும் இது வரை தெளிவான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தியப் பெருங்கடலில் சமீபத்தில் பதிவாகியுள்ள சிக்னல் எம்ஹெச் 370 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகின்றது.
கண்ணீரில் மூழ்கிய உறவினர்கள்
விமானம் மாயமாக மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மெட்ரோபார்க் ஹோட்டலில் விமானப் பயணிகளின் உறவினர்கள் கண்ணீருடனான பிரார்த்தனை ஒன்றை மேற்கொண்டனர்.
லிடோ ஹோட்டலின் சிவப்புக் கம்பளவிரிப்பில் இன்று அதிகாலை விமான வடிவம் ஒன்றினைச் சூழ்ந்த இதய வடிவத்தில் மெழுகுவர்த்திகளை அவர்கள் ஏற்றினர்.
அதனுள் எம்ஹெச்370 என்றும் மெழுவர்த்திகள் ஏற்றப்பட்டன. பின்னர் அதனைச் சுற்றி அமர்ந்த அந்த உறவினர்களில் சிலர் அமைதியாகவும், சிலர் பிரார்த்தனை செய்யும்வண்ணம் தங்கள் உள்ளங்கைகளை அழுத்திய வண்ணம் மௌனமாகவும் அமர்ந்திருந்தனர்.
இதுகுறித்து ஸ்டீவ் என்ற உறவினர் கூறுகையில், நாங்கள் இவ்வாறு கடந்த 31 நாட்களாகக் காத்திருக்கிறோம், இனி எதையும் இழந்துவிட்ட உணர்வோ, காயமோ, விரக்தியோ தோன்றவேண்டாம், இனி அழுவதற்கு ஒன்றும் இல்லை என்று வந்திருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இன்று வரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாததால் ஒரு வித ஏக்கமே அனைவரது முகத்திலும் இருந்தது.



No comments: