மலேசிய விமான மர்மம் தீர்வு கிடைக்காமல் போகலாம்: காவல்துறை..
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த மாதம் 8-ம் தேதி 239 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம் திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து மாயமானது. செயற்கைக் கோள்கள் மூலம் எடுத்த புகைப்படங்களை வைத்து, அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை விமானத்தின் எந்த பாகங்களும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், விமானம் காணாமல் போனதற்கான காரணம் தெரியாமலேயே போய்விடலாம் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
“விசாரணை தொடர்ந்து நடைபெறலாம். ஒரு சிறிய தகவல் கிடைத்தாலும் அதனை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை முடிவில், விமானம் காணாமல் போனதற்கான உண்மையான காரணம் தெரியாமல்கூட போகலாம். அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், பைலட், துணை பைலட்டுகளின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர், சில தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும் பலர் விசாரிக்கப்பட உள்ளனர்” என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் காவல்துறை இதுவரை வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தீவிர விசாரணை நடத்தி 170 அறிக்கைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: