திருவொற்றியூர் திருநங்கை கொலை கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவொற்றியூர், சதானாந்தபுரத்தை சேர்ந்தவர் மகபூப்பாஷா (45). திருநங்கை. சமையல் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35). மகபூப்பாஷா, கடந்த 7ம் தேதி, ஆரோக்கியராஜ், மகபூப்பாஷாவை கொலை செய்துவிட்டு, திருவொற்றியூர் போலீசில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், ஆரோக்கியராஜ் வீட்டின், பக்கத்து தெருவில் மகபூப்பாஷா வசித்தார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. மகபூப்பாஷாவின் வீட்டில் அவ்வப்போது, இரவு நேரங்களில் ஆரோக்கியராஜ் தங்குவார். மேலும், ஆரோக்கியராஜ் ரூ.2 லட்சத்தை மகபூப்பாஷாவிடம் கடனாக வாங்கியுள்ளார். மகபூப்பாஷாவுடன், ஆரோக்கியராஜ் பழகுவது, அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அவரை கண்டித்துள்ளனர். பின்னர், அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது, ஆரோக்கியராஜிக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனால் ஆரோக்கியராஜ், மகபூப்பாஷாவை சந்திப்பதை தவிர்த்தார்.
ஆனாலும், ஆரோக்கியராஜிக்கு அடிக்கடி போன் செய்து வீட்டுக்கு வரும்படி மகபூப்பாஷா அழைப்பார். நீ வரவில்லை என்றால், நான் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி கொடு என கேட்பார். இதனால், வேறு வழியின்றி அவரது வீட்டுக்கு சென்றுவிடுவார். இந்த விஷயம் ஆரோக்கியராஜ் குடும்பத்தினருக்கு தெரிந்ததும், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், மகபூப்பாஷாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில், சம்பவத்தன்று மகபூப்பாஷா போன் செய்துள்ளார். ஆரோக்கியராஜ், அவரை கொலை செய்வதற்காக ஒரு கத்தியை வாங்கி சென்றார். இருவரும் சாப்பிட்டு தூங்கினர். விடியற்காலையில், மகபூப்பாஷா நல்ல தூக்கத்தில் இருந்தபோது, அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பின்னர், அவரது வீட்டில் இருந்த 30 சவரன் நகை, அவர் எழுதி கொடுத்த ஸ்டாம்ப் பேப்பர் ஆகியவற்றை எடுத்து கொண்டு திருவல்லிக்கேணி நடேசன் தெருவில் வசிக்கும் நண்பர் கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டு போலீசில் சரணடைந்தார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். ஆரோக்கியராஜ் கொடுத்த தகவலின்பேரில் கார்த்திக்கிடம் இருந்த நகை, ஸ்டாம்ப் பேப்பர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments: