தவறான கருமுட்டையால் கர்ப்பமான இளம்பெண் அதிர்ச்சி
திருமணமாகி கருவுற இயலாத பெண்களுக்கு, செயற்கை கருவூட்டல் முறை பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இந்த முறை மூலம் கருத்தரித்த பெண் ஒருவர், தான் சுமப்பது மற்றொருவரின் குழந்தை என்பதை அறிந்து வேதனைக்குள்ளாகி உள்ள சம்பவம் இத்தாலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் செயற்கை கருவூட்டலுக்காக ஒரே நாளில் 4 தம்பதிகள் சென்றனர். இந்த சிகிச்சையின்போது ஒரு தம்பதியின் கருமுட்டை தவறுதலாக மற்றொரு பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் கர்ப்பமடைந்த அந்த பெண்ணுக்கு இரட்டைக்குழந்தை உருவானது. தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண்ணுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவளுடைய வயிற்றில் இருப்பது மற்றொரு தம்பதியின் கருமுட்டையில் உருவான கரு என்பது தெரியவந்தது. 3 மாதமாக தனது குழந்தை என்று நினைத்து ஆசையாக சுமந்த அந்த பெண்ணுக்கு, இந்த செய்தி மிகப்பெரிய இடியாக அமைந்தது. இது குறித்து தகவல் அறிந்த இத்தாலி சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments: