Header Ads

ஐநாவின் மனித உரிமை விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்: இலங்கை பிடிவாதம்

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, உலகில் இதுவரை வேறெங்கும் நடைபெறாத வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களை அரங்கேற்றியது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. போர் இல்லாத அமைதி பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். 

உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இன்னும் பெரும்பாலானோர் முள்வேலிகளுக்கு மத்தியில் வாழும் நிலைதான் உள்ளது. நல்லிணக்க நடவடிக்கையும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு எடுக்கப்படவில்லை. சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சம மதிப்பு, சம நீதியுடன் வாழும் நிலையும் உருவாகவில்லை.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்தன.

இலங்கை பிரச்சினையில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், ஐ.நா. தூதர் நவி பிள்ளை கடந்த மாதம் அறிக்கை அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். நடந்த வன்முறைகள் குறித்து அரசு பல்வேறு வழி வகைகள் மூலம் விசாரணை நடத்தினாலும், பாதிக்கப்பட்ட மக்களிடமும், சாட்சிகளிடமும் நம்பிக்கை ஏற்படுத்துகிற அளவுக்கு அவை சுதந்திரமானவையாக இல்லை" என குற்றம் சாட்டினார். நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என்று இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

விவாதம் முடிந்த பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது. 

இதனையொட்டி, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நவி பிள்ளை தலைமையிலான விசாரணைக்கு ஐ.நா.சபை அனுமதியளித்தது. விரைவில் இந்த விசாரணை குழுவினர் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்று, போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வாக்குமூலம் பெற தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா.வின் மனித உரிமை விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கையின் வெளியுறவுத் துறை மந்திரி காமினி லக்‌ஷ்மன் பெரிஸ், ‘இந்த விசாரணை தொடர்பாக ஏற்கனவே தீர்ப்பை நிர்ணயித்து வைத்துள்ள நவி பிள்ளை தலைமையில் இந்த விசாரணை நடைபெறுவதை இலங்கை ஏற்றுக்கொள்ளாது. இந்த விசாரணை நியாயமானதாக இருக்காது. எனவே, இதில் இலங்கை அரசு பங்கேற்காது’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.