நரேந்திரமோடியை சந்தித்த நடிகர் விஜய் தனது இணைய தளத்தில் கூறிய பரப்பரப்பு தகவல்கள்
கோவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
நடிகர் விஜய் சந்திப்பு
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி 2–வது கட்ட பிரசாரத்தை தமிழகத்தில் நேற்று மேற்கொண்டார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர் பின்னர் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு நேற்று இரவு கோவை பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக கோவை வந்தார். முன்னதாக நடிகர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.
அதே ஓட்டலில் தான் நரேந்திரமோடியும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த ஓட்ட லுக்கு நரேந்திரமோடி நேற்று இரவு 7.15 மணிக்கு சென்றார். அங்கு நடிகர் விஜய், நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நீடித்தது. இதன்பிறகு நரேந்திர மோடி பொதுக் கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்துக்கு புறப்பட்டு சென்றார்.
அரசியல் நோக்கம் இல்லை
இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஜய் தனது இணைய தளத்தில் கூறியிருப்பதாவது:–
நான் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சந்தித்து பேசியதற்கு அரசியல் நோக்கம் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த போது மோடி என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அப்போது நான் ஆந்திர மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. தற்போது அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரை சந்தித்தேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
நரேந்திரமோடியை சந்தித்த படத்தையும் நடிகர் விஜய் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
ஆதரவு அதிகரிக்கும்
நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்தது குறித்து பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:–
கடந்த ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த், மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைதொடர்ந்து இப்போது நடிகர் விஜய், நரேந்திர மோடியை சந்தித்து உள்ளார். இப்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பை நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். இந்த சந்திப்பு எங்களது கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்புகிறோம். இளம் வாக்காளர்கள் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மோடியுடன் ஒரே மேடையில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: