திருமணம் செய்வதாக ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் தப்பி ஓட்டம்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண் பரிதவித்து வருகிறார்.
காதல்
தட்சிண கன்னட மாவட்டம் சுள்ளியா போலீஸ் எல்லைக்குட்பட்ட கோடிகானா பகுதியை சேர்ந்த பாஸ்கரா என்பவரின் மகன் கருணாகர்(வயது 28) ஜெ.சி.பி. டிரைவர். இவர் கடந்த ஆண்டு சுள்ளியா அருகே சிலுபார்குட்டே பகுதியில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரும் பணிக்கு சென்றிருந்தார்.
அப்போது கருணாகருக்கும், அந்த பகுதியை சேர்ந்த பல்லவி(வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அவர்கள் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்தனர்.
கர்ப்பம்
பின்னர் கருணாகர், பல்லவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் பல முறை உல்லாசம் அனுபவித்து உள்ளார். இந்த நிலையில் பல்லவி கர்ப்பமடைந்தார். இதுபற்றி பல்லவி, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கருணாகரிடம் கூறினார். ஆனால் அவர், கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்வதாக காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பல்லவி, கடந்த வாரம் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கருணாகர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
ஆண் குழந்தை பிறந்தது
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் சுள்ளியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையில் பல்லவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்த பல்லவி பரிதவித்தார்.
இதையடுத்து அவர் சுள்ளியா போலீசில், தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கருணாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கருணாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments: