Header Ads

தோல்விக்கு எனது மகனை குற்றம்சாட்ட வேண்டாம்: யுவராஜ்சிங் தந்தை வேதனை

இந்திய அணி 2–வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றும கனவை தகர்த்தவர் யுவராஜ் சிங். இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவரது மோசமான பேட்டிங் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

அதிரடியாக அடித்து விளையாட வேண்டிய கடைசி சில ஓவர்களில் யுவராஜ் சிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவர் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த சில ரசிகர்கள் சண்டிகாரில் உள்ள அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினார்கள்.

அதே நேரத்தில் யுவராஜ் சிங்குக்கு கேப்டன் டோனி, தெண்டுல்கர், துலீப் வெங்சர்க்கார், ஹர்பஜன் சிங் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ரவிசாஸ்திரி, கும்ப்ளே ஆகியோர் யுவராஜ் சிங் ஆட்டத்தை விமர்சித்து இருந்தனர்.

இந்த நிலையில் தோல்விக்கு யுவராஜ்சிங்கை குற்றம்சாட்ட வேண்டாம் என்று அவரது தந்தை யோக்ராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு யுவராஜ்சிங் மட்டுமே காரணம் அல்ல. இதனால் அவரை குற்றம்சாட்ட வேண்டாம்.

தோல்வி அடையும் போது அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனம் வருகிறது. வாழ்க்கையானாலும், விளையாட்டானாலும் ஏற்றம், இறக்கம் இருக்கும். அது ஒரு பகுதியாகும். வெற்றி, தோல்வியை ஒரே மனநிலையில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

1983–ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோற்றது. அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய வீரர்களின் அறைக்கு வந்து பாராட்டினார். எங்களை விட சிறப்பாக விளையாடினீர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று இந்திய வீரர்களை அவர் புகழ்ந்தார். அது மாதிரி தான் போட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

யுவராஜ்சிங் உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி விளையாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.