இனம் டைரக்டர் சந்தோஷ் சிவன் வீட்டுக்கு இன்னமும் போலீஸ் காவல் நீடிக்கிறது!
இலங்கை தமிழர் கதையை இனம் என்ற பெயரில் படமாக்கி பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ்சிவன். இலங்கை தமிழர்களின் பிரச்னை என்னவென்று தெரியாமல் வெளியில் இருந்து பார்த்து ஒருதலைபட்சமாக அவர் படமாக்கி விட்டதாக பல தமிழ் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.
என்றாலும், அப்படத்தை தில்லாக வெளியிட்டார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால், அஞ்சான் படப்பிடிப்புக்காக அவர் மும்பை சென்ற இடத்தில் அங்குள்ள தமிழர்கள் போர்க்கொடி பிடித்தோடு, உலகத்தமிழர்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததால், தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த படத்தை ரிட்டன் வாங்கினார் லிங்குசாமி.
இதையடுத்து, சில தமிழ் அமைப்புகள், சந்தோஷ்சிவன் தங்களுடன் இலங்கை தமிழர் பிரச்னை பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தன. அப்படி அவர் அதில் கலந்து கொள்ளாவிட்டால், இனிமேல் அவர் எந்த தமிழ்ப்படத்தில் பணியாற்றினாலும் அந்த படங்களை வெளியிடுவதை தடுப்போம் என்றும் எச்சரித்தனர்.
ஆனால், இப்போது வரை அதற்கு எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. இந்த நிலையில், சர்ச்சைகள் வெடித்தபோது சென்னை ராமாபுரத்தில் உள்ள சந்தோஷ்சிவனின் வீட்டுக்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு இப்போது வரை தொடர்கிறது. தனக்கான அச்சுறுத்தல்கள் இன்னும் இருந்து கொண்டேயிருப்பதால் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம் சந்தோஷ்சிவன்.

No comments: