Header Ads

கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் பாணியிலேயே கதை இருக்கும் இயக்குனர் சவுந்தர்யா பேட்டி

கோச்சடையானில் நவீன தொழில்நுட்பம் இருந்தாலும், ரஜினிகாந்த் பாணியிலேயே கதை இருக்கும் என்று இயக்குனர் சவுந்தர்யா கூறினார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உயர் தொழில்நுட்பம்

கோச்சடையான் படத்தில் நடிக்க கதையை பார்த்து தான் எனது தந்தை ஒப்புக் கொண்டார். அவரது மகளான நான் இயக்கும் காரணத்திற்காக அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படத்தில் நல்ல கதை இருந்தது. இந்த படம் உயர் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.

ஹாலிவுட் படங்களில் தான் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கதைக்கு தொழில்நுட்பம் தேவைப்பட்டது. இதுபற்றி எனது தந்தையிடம் எடுத்து கூறினோம். அதன்பிறகே அவர் ஏற்றுக் கொண்டார். இந்த படத்தை என்னால் கையாள முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் படத்தை தொடருமாறு எனது தந்தை கூறினார்.

ரஜினிகாந்த் பாணி

இதுபோன்ற படங்களை எடுக்க 5 முதல் 6 ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் குறிக்கோளுடன் செயல்பட்டதாலும், கடவுளின் உதவியாலும் 2 வருடத்துக்குள் படத்தை எடுத்து முடித்து உள்ளோம். இது ஒரு வர்த்தக ரீதியான படம். அதேபோல புதிய தொழில்நுட்பம் கொண்ட படம். ஆனால் ரஜினிகாந்த் படத்தில் கதை எப்படி இருக்குமோ, அதே பாணியிலேயே கதை இருக்கும். படத்தில் எனது தந்தையின் கதாபாத்திரம் பற்றி விவரிக்க முடியாது.

ராணா படம்

ராணா படத்தை தொடங்கும் வேளையில் துரதிருஷ்டவசமாக எனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் நலமடைந்தார். மீண்டும் அந்த படத்தை தொடங்க நினைத்தபோது, அந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு அதிக உடல் உழைப்பு தேவைப்பட்டது. இதனால் அந்த சூழ்நிலையில் படத்தை தொடர்வதை கைவிட்டோம்.

 அந்த ‘ராணா’வின் தந்தை தான் கோச்சடையான். ‘ராணா’வுக்காக ஏற்கனவே கதையை எழுதி விட்டோம். அதன் கதை தயாராக உள்ளது. எனது தந்தைக்காக அந்த படத்தை குறைந்த உடல் உழைப்புடன் எடுக்க விரும்புகிறோம். இதனால் படத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக உடல் வலுவை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ராணா படத்தின் கதை ஒரு புதிய கதை. தொழில்நுட்பத்தை புகுத்தி படத்தை எடுப்பதை எனது தந்தை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

No comments:

Powered by Blogger.