சனல்4 ஊடக குழுவினரை தடுத்து நிறுத்திய மஹிந்த அரசாங்கம்!: பின்னணியில் செயற்பட்டவருக்கு அமைச்சு பதவி
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த எஸ்.எம். சந்திரசேன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக விசேட திட்டங்கள் அமைச்சராக கடந்த 23ஆம் திகதி திடீரென பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
விசேட திட்டங்கள் அமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாணம் நடைபெற்றது.
உலகிலேயே பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இருக்கும் போது, 'விசேட திட்டங்களுக்கு'' இன்னுமொரு அமைச்சர் தேவையா என கேள்விகள்
எழுந்திருந்தன. எனினும், ஆளும் கட்சிக்குள் இருந்து இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவில்லை.
இதற்கு முக்கிய காரணம், சனல்4 ஊடகவியலாளர்களை யாழ்ப்பாணம் செல்லவிடாது, இடைமறித்து கொழும்பிற்கு திரும்பியனுப்புவதற்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவே தலைமையேற்று நடத்தியுள்ளார்.
இதற்கு பிரதி உபகாரமாகவே பிரதியமைச்சராக இருந்த எஸ்.எம்.சந்திரசேன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாடு முடிவடைந்து சில தினங்களில் அவசரமாக, இவ்வாறான ஒரு அமைச்சர் நியமிக்க வேண்டிய தேவை, என்ன இருக்கிறது என கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும் விடை எதுவும் கிடைக்காமல் இருந்தது.
எனினும், சனல்4 ஊடகவியலாளர்களுக்கெதினரான போராட்டம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றுக்கு பிரதி உபகாரமாகவே இந்த அமைச்சுப் பதவி எஸ்.எம். சந்திரசேனவிற்கு வழங்கிப்பட்டதாக ஆளும் கட்சி செய்திகள் கூறுகின்றன.
அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, அவரது சகோதரரும், வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சருமான எஸ்.எம். ரஞ்சித் ஆகியோருக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர் என்றும் தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனல்4 ஊடகவியலாளர்கள் கொழும்பு விடுதியில் புறப்பட்ட ஊடகவியலாளர்கள் குழு குறித்த ரயில் தான் யாழ்ப்பாணம் செல்கின்றனர் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பது வியப்பளிப்பதாக செனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
அத்துடன், புலனாய்வாளர்கள் தங்களை பின்தொடர்வதாகவும், அவர்கள் வழங்கிய தகவல்களுக்கமையவே தமது பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் சனல்4 ஊடகவியலாளர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியை ஏற்றுள்ள இலங்கை அரசாங்கமே ஊடக சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது என்ற செய்தி தற்போது அம்பலமாகியுள்ளது.

No comments: