Header Ads

விடியும்முன் - தமிழின் இன்னொரு காப்பி

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதையை அப்படியே எடுத்து தனது பெயரில் வெளியிட்டால் அவரை எழுத்தாளர் என்று மதிக்க மாட்டார்கள். அது திருட்டு என்று அழைக்கப்படும். திருடியவர் திருடன். சினிமாவில் அதை செய்தால் அதற்கு இன்ஸ்பிரேஷன் என்ற செல்ல பெயர் சூட்டி, சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு பாராட்டுவிழா நடத்தப்படும்.

இந்த வருடம் தமிழில் வெளிவந்த வித்தியாசமான முயற்சி என ஒருசில படங்களையே அடையாளம் காட்ட முடியும். அதில் ஒன்று மூடர்கூடம். படத்தை தயாரித்து இயக்கியவர் நவீன்


இந்தப் படம் தயாரிப்பாளர் என்றமுறையில் நிறைவான லாபத்தையும், இயக்குனர் என்ற முறையில் நல்ல பெயரையும் சம்பாதித்து தந்துள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார். கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், திரைத்துறை சார்ந்த அமைப்புகள் நவீனை அழைத்து பாராட்டுவிழா நடத்துகின்றன. அவரின் அனுபவத்தை அறிய ஆவல் கொண்டுள்ளன. 

மூடர் கூடம் அட்டாக் தி கியாஸ் ஸ்டேஷன் படத்தின் தழுவல் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். அதில் கியாஸ் ஸ்டேஷன் என்றால் இதில் வீடு. காட்சிகள், வசனங்களைக்கூட அப்படியே தழுவியிருந்தார் நவீன். முற்போக்கு சாயத்துடன் தன்னை முன்னிறுத்துகிறவர் இந்த காப்பி குறித்து இதுவரை எதுவும் வாய் திறக்கவில்லை. மூடர் கூடம் தனது சொந்த கற்பனை என்ற பிம்பத்தையே தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விடியும்முன் திரைப்படம் அதன் கட்டான திரைக்கதைக்கு பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று என விமர்சகர்கள் அடையாளப்படுத்துகின்றனர். ஒரு விமர்சகர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இரண்டாம் உலகம் படங்களை எடுத்தவர்கள் இந்தப் படத்தை முதலில் பார்த்து படம் எடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளட்டும் என எழுதுகிறார்.

இவ்வளவு பாராட்டுக்குரிய விடியும்முன் 2006 ல் இங்கிலாந்தில் வெளியான London to Brighton படத்தின் அப்பட்ட காப்பி. பால் ஆண்ட்ரூ வில்லியம்ஸ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். வில்லியம்ஸின் முதல் படம் இது. நடித்தவர்களும் அத்தனை பிரபலமில்லாதவர்கள். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வெளியான படம், பார்த்தவர்களை அதிர வைத்தது. அந்த வருடத்தின் பெஸ்ட் த்ரில்லர்களில் ஒன்று என்ற பாராட்டையும் பெற்றது. சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்றது.

London to Brighton படத்தில் வரும் விலைமாது, சின்னப் பெண், சின்ன குழந்தைகளை மட்டுமே விரும்பும் பணக்கார சைக்கோ, விலைமாதுவின் பிம்ப், பணக்கார சைக்கோவின் மகன் என்று அனைத்து கதாபாத்திரங்களும் விடியும்முன் படத்தில் உண்டு. சம்பவங்களும் அப்படியே.

ஒரு படத்தைப் பார்த்து அப்படியே அதனை தமிழ்ப்படுத்திவிட்டு சிறந்த இயக்குனர், வித்தியாசமான படத்தை தந்தவர் என்ற பெயரை எளிதாக தட்டிச் செல்கின்றனர். எந்தக் கலையாக இருந்தாலும் அதன் அடிநாதமாக இருப்பது உண்மையும், நேர்மையும்.

அந்த இரண்டும் இல்லாமல் பிறரின் திறமையை அவர்களுக்கு தெரியாமல் தங்களுடையது போல் பாவிக்கும் இந்த இயக்குனர்கள்தான் இன்று கல்லூரிகளுக்கும், திரைப்பட அமைப்புகளுக்கும் ஆதர்சமாக இருக்கிறார்கள்.


சினிமாவின் அருமை பெருமைகளை இவர்கள்தான் உலகுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

முதல் படம் தந்த வெற்றியால் மூடர் கூடத்தைவிட வித்தியாசமான ஒரு ஸ்கிரிப்டை எழுதி வருகிறாராம் நவீன். அதாவது அடுத்த டிவிடி நவீனுக்கு கிடைத்துவிட்டது. 

விரைவில் விடியும்முன் இயக்குனருக்கும் ஒரு நல்ல டிவிடி கிடைக்க இறைவன் அருள்பாலிக்கட்டும்.

No comments:

Powered by Blogger.