தண்டவாளம் வழியாக நடந்தபோது ரயில் மோதி சிறுமி உட்பட 2 பேர் பரிதாப சாவு
தென்தாமரைகுளம் : குமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே காத்தாடித்தட்டு பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் (45), அபிஷா (4), இலந்தையடித்தட்டை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுதா (35), மகள் அனுஷா (8), ராஜா மகன் புவனேஷ்வரன் (11) உட்பட 7 பேர் நேற்று சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதாரதின விழாவுக்கு வந்தனர்.மாலையில் வீடு திரும்புவதற்காக வடக்கு தாமரைகுளம் ரயில் பாதை வழியாக நடந்து வந்தனர். அங்கிருந்து பறக்கை சென்று பஸ்மூலம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.வடக்கு தாமரைகுளம் ரயில்வே ஆற்றுபாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கொல்லத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி மெமோ ரயில் வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த 7 பேரும் ஆற்று பாலத்திலிருந்து தண்டவாளத்தின் வழியாக வெளிபாதைக்கு ஓடி வரமுயன்றனர். ரயில் மிக அருகே வந்து விட்டதால் சுதா மற்றும் 2 சிறுவர்களும் ஆற்றுக்குள் குதித்தனர். மற்ற 4 பேர் மீதும் ரயில் மோதியது. இதில் பஞ்சவர்ணம் மற்றும் அனுஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புவனேஸ்வரன், அபிஷா இருவரும் படுகாயமடைந்தனர். தண்ணீரில் தத்தளித்த 3 பேரையும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அதில் மயக்கமடைந்த சுதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments: