கலிபோர்னியா திரைப்பட நூலகத்தில் பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார்
தமிழ்த் திரையுலகின் நடனப் புயல் பிரபுதேவா இந்தித் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகின்றார். கடந்த ஆண்டு ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் நெக்ஸ்ட் ஜென் பிலிம்சிஸ் நிறுவனம் தயாரித்த ‘ஆர்.ராஜ்குமார்’ என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் திரைக்கதையை பிரபுதேவா சொந்தமாக எழுதியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதையை கலிபோர்னியாவில் புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் அகாடமியின் நூலகம் தேர்வு செய்துள்ளது.
அங்கு இந்தக் கதை திரைப்பட பயிற்சி மாணவர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் போன்றவர்களின் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும். இந்த அறிவிப்பு பிரபுதேவாவின் திரைப்பட வாழ்வில் ஒரு மைல்கல்லாகும்.
இந்தத் தகவல் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் விக்கி ரஜனி, இந்த அங்கீகாரம் குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர ‘லகான்’, ‘சக் தே இந்தியா’, ‘தேவதாஸ்’, ‘ராஜ்நீதி’, ‘டேம் 999’ போன்ற படங்களும் இந்த நூலகத்தில் வைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

No comments: