சிக்கிம் பெண்ணிடம் ரூ. 1.95 லட்சத்தை கொள்ளையடித்த பிரிட்டன் பேஸ்புக் நண்பர்
சிக்கிம் பெண் ஒருவரிடம் பேஸ்புக்கில் நண்பராக பழகிய வாலிபர் அவரிடம் இருந்து ரூ. 1.95 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார். வாலிபர் தன்னை பிரிட்டனை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது. மேற்கு சிக்கிமை சேர்ந்த சிரிஜனா ராய்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், வில்லியம்ஸ் ஜாக்ஸ்சென்(பிரிட்டனை சேர்ந்தவர் என்று கூறிகொண்டவர்) என்ற வாலிபருடன் பேஸ்புக்கில் நண்பராக இணைந்துள்ளார். இவரும் பேஸ்புக்கில் சாட்டிங் செய்துள்ளனர். அப்போது வில்லியம்ஸ், சிரிஜனாவிடம் பணம் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை அனுப்ப உங்களுடையை முகவரியை தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
உங்களுக்கு 70 ஆயிரம் பவுண்ட் பணம் மற்றும் விலைஉயர்ந்த பொருட்களை அனுப்ப உள்ளேன், அதற்கு சர்வதேச டெலிவரி சார்ஜ் மற்றும் வரிகளை கட்ட பணம் தேவை. அதற்கான பணத்தை நீங்கள் அனுப்புங்கள் என்று சிரிஜனாவிடம் கேட்டுள்ளார். இதனை அனைத்தையும் சிரிஜினா உண்மை என்று நம்பி பணத்தையும் கொடுக்க தயாராகியுள்ளார். இதனையடுத்து பெண் தரகர் ஒருவர் ரூ. 1.95 லட்சத்தை தவணைமுறையில் வெவ்வேறு நாட்களில் 'டெப்பாசிட்' செய்ய ராயிக்கு அறிவுரை கூறியுள்ளார். பின்னர் அந்த பெண் ரூ. 25 ஆயிரம், ரூ. 60 ஆயிரம் மற்றும் ரூ. 1.10 லட்சம் என தவணை முறையில் டெப்பாசிட் செய்துள்ளார். இந்நிலையில் 4 வது முறை அவர் பணம் கட்ட சென்றபோதுதான் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் தனது வங்கி கணக்கை சரிபார்த்துள்ளார்.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும், ஜாக்செனின் அறிவுரையின்படி அந்த பெண் சில இ-மெயில் விண்ணப்பங்களையும் நிரப்பியுள்ளார். மேலும், தான் பெண் தரகரை தொடர்பு கொண்ட போது அவர் எனது அழைப்பை ஏற்க மறுத்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் வெவ்வேறு கணக்குகளில் வெவ்வேறு மாநிலங்களுக்கு பணத்தை டெப்பாசிட் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் சம்பந்தப்பட்ட 9 வங்கி கணக்குகளையும் முடக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கியிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், 9 வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அளிக்குமாறு வங்கி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments: