ரஜினி ஜோடியாக சோனாக்ஷி: எதிர்ப்பு தெரிவித்த சத்ருகன்
தனது இளைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதன் கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் மேற்பார்வை பொறுப்பையும் ஏற்றிருந்தார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து ரஜினியை வைத்து புதிய படம் இயக்குகிறார் ரவிகுமார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க அவரிடம் பேசப்பட்டது. இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு ரஜினி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
அவர் சம்மதம் தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தார். இவர் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்.சத்ருகனும், ரஜினியும் சம காலத்து நடிகர்கள். தந்தை வயதுள்ள ரஜினியுடன் மகள் நடிப்பதை சத்ருகன் விரும்பவில்லை என்பதால்தான் சோனாக்ஷி சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினியுடன் ஏற்கனவே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய், கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோன் போன்ற டாப் ஹீரோயின்கள் நடித்திருப்பதுடன் பல பாலிவுட் ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ஹீரோயின்களின் இந்த ஆர்வம் சோனாக்ஷியின் மனதிலும் எழுந்தது. தனது விருப்பத்தை தந்தை சத்ருகனிடம் தெரிவித்தார். அவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பிடிவாதம் பிடித்து, வலியுறுத்தியதால் வேறு வழியின்றி அவரும் அதற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து ரஜினியுடன் நடிக்க சோனாக்ஷி சம்மதம் தெரிவித்தார்.இது பற்றி சோனாக்ஷி கூறும்போது, ஒரு வழியாக தென்னிந்திய படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். இதைவிட சிறந்த ஒரு படம் எனக்கு கிடைக்காது. கதை கேட்டேன் பிடித்திருந்தது. ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவருடன் ஜோடியாக நடிக்கிறேன். இந்த படத்திலிருந்து எனது தென்னிந்திய திரையுலக பயணத்தை தொடங்குகிறேன் என்றார்.

No comments: