Header Ads

இறுதிப் போர்! எரிக்கப்பட்ட புலிகளின் தளபதி! - போர்க் குற்ற ஆதாரங்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)

ஐந்து வருடங்களுக்கு முன்பு 2009 இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் சூடு துவங்கிய ஜனவரி மாதம். இலங்கையில் ஈழப் போர் உச்சகட்டம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. புலிகள் கைவசம் இருந்த தமிழ் மண் ஒவ்வொன்றாக கைவிட்டுப் போக பல நாட்டுப் படைகள் போராளிகளையும் பொதுமக்களையும் வேட்டையாடியது. புலி தலைவர்களுக்கு என்ன ஆனது என்ற பதைபதைப்பு தமிழகத்தில் படரத்துவங்கியது.


அது நாடாளுமன்ற தேர்தலில் மிக முக்கிய பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டது. இதோ இப்போதும் இந்திய நாடாளுமன்ற தேர்தல்! தமிழக கட்சிகள் கூட்டணி கணக்குகளை போடத்துவங்கிவிட்டது. ஈழ உணர்வாளர்கள் எந்தப் பக்கம் என்பது இன்னும் முடிவாகவில்லை. 2009&ல் வெளிவந்த போர் செய்திகளுக்கு சற்றும் குறைவில்லாத போர் குற்ற செய்திகள் அடுத்தடுத்த பக்கங்களில்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்பதுபற்றி இதுவரை விரிவான எந்த தகவல்களும் வந்து சேரவில்லை. சேனல் 4 வெளியிட்ட படங்களையும், சொன்ன தகவல்களையும் தாண்டி நமக்கு எந்த விஷயமும் தெளிவாக தெரிய வரவில்லை. ஏற்கெனவே நம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிய பாலகன் பாலச்சந்திரன் கொலை படங்கள், சரணடைந்த போராளிகளை நிர்வாணப்படுத்தி கொடூரமாக சுட்டுக்கொன்ற காட்சிகள், இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்கள் என கடைசிகட்ட முள்ளிவாய்க்கால் கொலைக்களக் காட்சிகள் இன்னும் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

இப்போது நமக்கு இரண்டு கொலைக்காட்சிகள் கிடைத்திருக்கின்றன. இந்தக் கொலைக்காட்சிகளின் ஓரிரு காட்சிகள் மீடியாக்களின் வந்திருந்தாலும், அவர்கள் கொலை செய்யப்பட்ட சூழ்நிலை, எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? இறுதி நிமிடங்களில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன? என்பதுபற்றிய முழு விவரங்கள் யாருக்கும் தெரியாது. அது இப்போது இங்கே வெளியாகிறது. இலங்கையில் இறுதிப்போர் முடிந்தவுடன், அந்தப் போரில் பிடிபட்ட முக்கிய போராளிகளை கையாண்ட ஒரு சிங்கள ராணுவ உயர் அதிகாரி ஒரு வெளிநாட்டில் இப்போது செட்டிலாகி விட்டார். அவர் மனசாட்சி உலுக்கியதோ என்னவோ, அவர்தான் இப்போது ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளிதான் என்பதற்கான ஆதார சாட்சியாக மாறப் போகிறார். யெஸ்! இவர்தான் ஜெனீவாவில் மார்ச் மாதம் நடக்கப்போகும் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தப் போகும் அமெரிக்காவுக்கு போர்க் குற்ற ஆதாரங்களைக் கொடுத்து கை கொடுக்கப் போகிறார்.

இனி நம்மிடம் இருக்கும் போர்க் குற்ற ஆதாரங்கள் இங்கே:

கடந்த 2010&ம் ஆண்டு ஒரு வீடியோ ஆதாரம் வெளிவந்தது. ஒரு போராளியை தென்னை மரத்தில் கட்டி வைத்திருப்பார்கள். அவரது உடலெல்லாம் கத்தியால் கீறி ரத்தம் வழிந்தபடி இருக்கும். இடது கை தோள்பட்டைக்கு கீழே முறிக்கப்பட்டு ஒரு துணியால் ஒடிந்த கையை கழுத்தோடு கட்டியிருப்பார்கள். சுற்றி நிற்கும் பூட்ஸ் கால்கள், சிங்களத்தில் விசாரிக்கும். அதற்கேற்ப பார்வையை திருப்பியபடி வலியோடு ஏதோ முணுமுணுத்து பேசும் போராளியை ஒரு சிறிய கத்தியால் வெடுக்கென்று கீறுவான். ரத்தம் சொட்டும்! இந்த காட்சிகள்தான் இதுவரை வெளியானவை. அதன்பிறகு அந்த போராளிக்கு என்ன ஆனது என்ற விவரங்கள் இல்லை.
ரத்தம் சொட்டும் போராளிக்கு அடுத்து என்ன நடந்தது? அவர் யார்?
இறுதிக்கட்ட போரில் பங்கெடுத்த ஒரு போராளி இப்போது வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார். இவர்தான் அந்த கொலைக்காட்சியை நேரில் பார்த்தவர். அவர் அந்த ரத்த நேரத்தை இங்கே சொல்கிறார்.

“இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நேரம். நாங்கள் இருந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது. மொத்தமுமாக பதினைந்துபேர் பிடிபட்டோம். அனைவரின் கைகால்களையும் கட்டிப்போட்டு ஓர் இடத்தில் உட்கார வைத்தார்கள். ராணுவத்தோடு இருந்த ‘கருணா’ ஒட்டுக்குழு போராளிகளும் அங்கே இருந்தார்கள். தமிழர்களான அவர்கள்தான் ஆள்காட்டிகள். அவர்கள் முக்கிய நபர் என்று விரல் நீட்டிய நபரைத்தான் தென்னை மரத்தில் கட்டி வைத்தார்கள். சித்ரவதை செய்து அடித்து உதைத்ததில் அவரது கை முறிந்தது. அந்த போராளி அதை பொருட்படுத்தவேயில்லை. தொங்கி ஆடிய அந்த கையை ஒரு துணியால் கட்டி கழுத்தில் மாட்டிவிட்டார்கள். நாங்கள் சற்று தூரத்தில் ஏதும் செய்ய முடியாத அவல நிலையில் நிர்கதியாய இருந்தோம். நடப்பதை எல்லாம் கவனித்தோம்.

அந்த போராளியிடம், ‘நீ எந்த படையணிக்கு தளபதி? உனக்கான வேலை என்ன? எங்கே இருந்தாய்? யாருக்கான பாதுகாப்பு பொறுப்பாளனாய் நின்றாய்? தலைவர் எங்கே? முக்கிய தளபதிகள் எங்கே?’ என்ற விசாரணையைத்தான் திரும்ப திரும்ப கேட்டு கேட்டு ஒவ்வொரு கேள்விக்கு அவர் உடம்பை கத்தியால் கீறினார்கள். அந்த போராளியின் வாயிலிருந்து ஒன்றும் தெரியாது என்ற பதிலே வந்தது. ஆத்திரமடைந்த படையினர் ஒவ்வொரு கட்டத்திலும் கத்தியால் கீறியபடியே இருந்தார்கள். வலி தாங்க முடியாத அந்த உச்சகட்ட நேரத்தில் ‘புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்’ என்றும் ‘அண்ணன் வாழ்க. தமிழீழம் மலர்க’ என்ற முழக்கம் மட்டுமே அந்த போராளியின் முணுமுணுப்பாக இருந்தது. எப்படியும் இறந்து போவோம் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.
ஆத்திரத்தின் உச்சத்துக்குப்போன படையதிகாரி (அந்த டீமில் ஒருவர்தான் & இப்போது அமெரிக்காவின் துருப்புச் சீட்டு) கண்ஜாடை காட்ட ஒரு ராணுவ வீரன் கையில் இருந்த சிறிய கத்தியால் கழுத்தை அறுக்க, ரத்தம் பீய்ச்சியது.. சற்று நேரத்தில் கண்கள் செருகியபடி நிற்க.. தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

அந்த மாவீரன் பட்ட சித்ரவதையை நினைக்கும்போது மனது இன்றும் பதறிப்போகிறது. தூக்கம் வர மறுக்கிறது.
அதன்பிறகு எங்களை எல்லாம் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் அணியில் இருந்த நான்கு பெண் போராளிகளை தனியே பிரித்து கூட்டிச் சென்றார்கள். இன்றுவரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள். என்ன ஆனார்கள்? சுட்டுக்கொன்றார்களா? கொலை செய்து புதைத்தார்களா? அல்லது எங்காவது வீசியெறிந்தார்களா என்ற விவரம் ஏதுமே தெரியவில்லை. ஒவ்வொரு கட்டமாக பிரித்தெடுத்து கடைசிகட்டமாக பல போராளிகளை தனியே ஒரு சித்ரவதை முகாமில் அடைத்து வைத்தார்கள். இன்றும் அது ரகசியமாகவே உள்ளது. அந்த கொடூர முகாமிலிருந்து எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் ஏதும் இல்லை. தெரியாது. அங்குகூட அந்த பெண் போராளிகள் இருக்கவில்லை என விசாரித்து தெரிந்துகொண்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார். இவரும் ஜெனீவாவில் நடைபெறப்போகும் போர்க் குற்ற விசாரணைக்கு ஒரு சாட்சியாகப் போகிறார்.

இறந்துபோன அந்த போராளியின் பெயர் கானகன். மிகச் சிறிய வயதிலேயே இயக்கத்தில் இணைந்தவர். தனிநபராக வேவு பணிக்கு அனுப்பப்பட்டு பலநாட்கள் பட்டினியோடு இருந்து ஆதாரங்களை திரட்டி திரும்புவதில் அதீத பாய்ச்சல் காட்டியவர். உளவு பார்ப்பதில் கைதேர்ந்தவரான கானகனைப் பற்றிய ஒரு சம்பவம். இலங்கை ராணுவ முகாம் ஒன்றை வேவு பார்க்கப் போனார் கானகன். ஒரு வாரம் உணவில்லாமல் ஒரே இடத்தில் இருந்து தன் பணியை செய்து கொண்டிருந்த கானகனை திடீரென்று ஐந்து சிங்கள ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தார்கள். கானகனின் நோக்கம் அவர்களுக்கு தெரிந்துவிட்டது.

அந்த நிமிடத்தில் வாழ்வா சாவா என்ற போராட்டம். கானகன் முடக்கபட்ட இடத்தில் எந்த ஆயுதமும் இல்லை. ராணுவ வீரர்களிடம் துப்பாக்கிகள் இருந்தன. சிங்கள வீரர்கள் சுதாரிப்பதற்குள் கானகன் முந்திக் கொண்டார். நிராயுதபாணியான கானகன் நேரடியாக மோதலில் ஈடுபட்டார். சிங்கள வீரர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தாத வகையில் கானகனின் தாக்குதல் இருந்தது. சில நிமிடங்கள் நீடித்த அந்த சண்டையில் தன்னைச் சுற்றி நின்ற ஐந்து சிங்கள வீரர்களின் தலையோடு முகாம் திரும்பினார். எப்படி என்ன என்று சக போராளிகள் கேட்டபோது சிறு சிரிப்பை மட்டுமே உதிர்த்தார். ‘வேவு பார்க்கறவன் ரொம்ப பேசக்கூடாது’ என்று மட்டும் சொன்னார். இது பிரபாகரன் கவனத்துக்குப் போனது. உடனே கானகனைப் பாராட்டி பிரபாகரன் அவருக்கு ‘புயல் வீரன்’ என்ற பட்டத்தை அளித்தார்.

சிங்கள ராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தபோது, துணைக் கட்டளை தளபதியாக இருந்தவர் இந்த கானகன். மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான ரத்னம் மாஸ்டருக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பாளராக இருந்தார்.

2009&ம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்தபோது மிக முக்கியத்துவம் வாய்ந்த தளபதியின் மெய்பாதுகாப்பு அணியின் தளபதியாகவும் இருந்தார். புலிகளின் கடைசிக்கட்ட ஊடறுப்பு தாக்குதல் மிக மோசமாக நடந்தது என்று சிங்கள படைத்தரப்பே ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படியான தாக்குதல் படையணியின் ஒரு பிரிவு தளபதியாகவும் இருந்துள்ளார். கடைசிக்கட்ட அந்த ஊடறுப்பு தாக்குதலின்போது நடந்ததென்ன? தப்பியவர்கள் யார்? உடனிருந்தவர்கள் யார்? என்ற விவரத்தை பெறத்தான் இந்த போராளியை மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.

இதுதான் நமக்குக் கிடைத்த சிங்கள ராணுவம் நடத்திய முதல் படுகொலைக்கான ஆதாரம். கானகனுக்கு நிகழ்ந்ததைவிட பல மடங்கு அதிகமான கொடூரம் நிறைந்த இரண்டாவது படுகொலைக்கான ஆதாரம் இதோ தொடர்கிறது.

தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் ரமேஷ் மாஸ்டர்! இவர் கமாண்டர் கர்னலாக பொறுப்பு வகித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கிய போராளி. பல்வேறு பொறுப்புகளில் இருந்து, முக்கிய பல தாக்குதல்களை நடத்தியவர். கடற்படை தளபதி சூசையின் தங்கை கணவர்தான் ரமேஷ் மாஸ்டர். கிழக்கு மாகாணத்தில் கருணா, புலிகளுக்கு துரோகியான பிறகு அவர் இடத்தில் பிரபாகரானால் நியமிக்கப்பட்டவர். கடைசிக்கட்ட போர் நடைபெற்ற வேலையில் இவர் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டார் என்ற தகவல் வெளியானது. பிறகு அவரது சடலம் புகைப்படமாக வெளியானது. போரில் காயம்பட்டு இறந்திருக்கலாம் என்று ரரேஷ் மாஸ்டரின் மரணத்துக்கு பதில் சொன்னார் மகிந்த ராஜபக்ஷே. இதுதான் ரமேஷ் மாஸ்டரின் மரணத்தில் இதுவரை உலகுக்கு தெரிய வந்த செய்தி!

பிறகு 2012 ஆம் ஆண்டு ஒரு வீடியோ ஆதாரம் வெளிவந்தது. அதில் ராணுவத்திடம் ரமேஷ் மாஸ்டர் உயிரோடு பிடிபட்ட காட்சி. குறுகிய இடத்தில் உட்கார வைத்து சுற்றி அமர்ந்துகொண்டு அவரை விசாரிக்கிறார்கள். உடை கழட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். பேண்ட் அணிந்தபடி பேசும் ரமேஷ் மாஸ்டரின் முதுகில் காயத்திற்கு ப்ளாஸ்டர் போடப்பட்டிருக்கிறது. அதை ஒரு ராணுவ வீரன் பிரித்துப் பார்க்கிறான். அதன்பிறகு விசாரணை தொடர்கிறது.

‘கடைசிக்கட்ட நிகழ்வுகள், தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் எல்லாம் எங்கே…?’ என்ற விசாரணைதான் ரமேஷ் மாஸ்டரிடமும் நடக்கிறது. அதன்பிறகு ரரேஷ் என்ன ஆனார் என்ற விவரம் இல்லை. அவரை சட்டையை கழட்டிவிட்டு தலைக்குமேலே பின்பக்கமாக கையை கட்டி நிற்க வைத்தபடி விசாரிக்கும் படம். அடுத்து அவர் சட்டையை உடுத்திக் கொண்ட படம். அதற்கடுத்து ஒரு அறையில் ரத்தச் சகதியாக அடித்துக் கொன்ற சடலமாக ரமேஷ் மாஸ்டர்.

அடுத்த படத்தில் ரமேஷ் மாஸ்டர் உடலை ஒரு புல்தரையில் கிடத்தியிருக்கிறார்கள். ஒரு சிங்கள ராணுவ வீரன் அருகில் நின்று பாதுகாப்புப் பணியில் இருக்கிறான். அடுத்த படத்தில் அடுக்கிய விறகு கட்டைகளின் மீது ரமேஷ் மாஸ்டர் கிடத்தப்பட்டு இருக்கும் படம். அடுத்ததாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இப்போது அதே சிங்கள ராணுவ வீரன் சலனம் இல்லாமல் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறான்.

கானகன், ரமேஷ் மாஸ்டர் ஆகிய இருவரையும் சர்வதேச போர் விதிகளை மீறி சித்ரவதை செய்வது, எரித்து கொல்வது ஆகிய அக்கிரமங்களுக்கு துணையாக இருந்த அந்த இலங்கை ராணுவத்தின் சில அதிகாரிகள். நாம் மேலே சொன்னது போல வெளிநாடு ஒன்றில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்கு போர்க் குற்ற ஆதாரங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயம் ராஜபக்ஷேவுக்கும் எட்ட, அவர் ஆடிப் போயிருப்பதாகக் கேள்வி. இந்தமுறை ராஜபக்ஷேவால் அமெரிக்காவுக்கோ, உலக நாடுகளுக்கோ எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது.

இதை எப்படி சமாளிக்கலாம் என்பதுதான் ராஜபக்ஷேவின் இந்த நிமிட பீதி! அவர் தனது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை பாகிஸ்தானுக்கு அனுப்பி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க வைத்திருக்கிறார். அப்போது “சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு பாகிஸ்தான் எப்போதும் உதவியாக இருக்கும்” என்ற வாக்குறுதியை ஷெரீப் சில்வாவிடம் கொடுத்த செய்தி அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கிறது. இந்தியாவின் மற்றொரு பகை நாடான சீனாவும் இலங்கைக்கு ஆதரவான முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டது. நெருக்கடியான நேரத்தில் வீட்டோ பவரை பயன்படுத்தவும் சீனா தவறாது என்கிறார்கள்.
இந்தியா என்ன செய்ய போகிறது?. பாகிஸ்தான், சீனாவோடு இலங்கைக்கு துணை நிற்கப் போகிறதா? அல்லது வழக்கம்போல் நாடகமாட போகிறதா என்பதே இப்போதைய கேள்வி.

பாக்ஸ் ஸ்டீபன் ராப் ஆபரேஷன்

வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரியின் வழிகாட்டுதலில்தான் அமெரிக்காவின் சர்வதேச போர்க் குற்ற விவகாரங்களை கையாளும் விசேஷ தூதுவர் ஸ்டீபன் ராப் கடந்த வாரம் இலங்கை வந்தார். அந்த நிலத்தில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பான ஆதாரங்களை தேடும் விதமாகவே அவர் வருகை இருந்தது. இவரது வருகைக்கு மகிந்த ராஜபக்ஷே எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இலங்கை அமைச்சர்கள் தரப்பில் ஸ்டீபன் ராப்பின் வருகையை எதிர்த்து கொழும்பில் பெரிய போராட்டம் நடைபெற்றது. அவரை உடனே திரும்பிப் போக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் ஸ்டீபன் ராப் அஞ்சவில்லை. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே சிசனுடன் போர் நடந்தேறிய பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று வந்தார் ராப். போர் நடந்தபோது புதுக்குடியிருப்பில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தையும் சென்று பார்வையிட்டார். பலரை நேரடியாகவும், சிலரை மறைமுகமாகவும் சந்தித்து ஆதாரங்களை திரட்டினார். கத்தோலிக்க மதகுருமார்களையும் சந்தித்தார்.
அதுமட்டுமல்ல, போர் நடந்தபோது இரணைப்பாலையில் இருந்த செயின்ட் ஆன்டனிஸ் பள்ளி வளாகத்திற்கும் சென்றார் ராப். அந்த பெரிய பள்ளி மைதானத்தில்தான் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். பிறகு விதிமுறைகளை மீறி அந்த இடத்தில் சிங்கள ராணுவத்தின் விமானங்கள் குண்டு வீசியதும், அதில் அப்பாவி பொதுமக்கள் செத்து மடிந்ததும் நடைபெற்றது. குண்டு வீசிய ஆதாரம், மக்கள் காயம்பட்ட ஆதாரம், கொத்துக் கொத்தாக இறந்த ஆதாரம் என அனைத்தையும் திரட்டிய ஸ்டீபன் ராப், இப்போதைக்கு வெளியில் தெரியாத சில ஆதாரங்களையும் அங்கே கைப்பற்றினார்.

அதனையொட்டி அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் செயின்ட் ஆன்டனி பள்ளி மைதானத்தின் படத்தை போட்டு ‘இந்த இடத்தில்தான் பல நூறு அப்பாவிகள் குண்டுவீச்சால் இறந்தார்கள். போர்க் குற்றம் நடத்த இடம் இதுதான்’ என்று புகைப்படத்தோடு வெளியிட்டார்கள். இங்கேதான் ராஜபக்ஷேவுக்கு எகிறியது ரத்தக் கொதிப்பு. ‘அந்த இணையதள பதிவை நீக்க வேண்டும். அபாண்டமான குற்றச்சாட்டு’ என இலங்கை வாய்திறந்தது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவருக்கு அதிகாரிகளை அனுப்பி கெஞ்சிப் பார்த்தது. ஆனால், அமெரிக்காவோ ‘அப்படி நீக்க முடியாது. செய்தி உறுதியானதுதான்’ என திட்டவட்டமாக அறிவித்தது.
வருகிற மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அமெரிக்கா கிட்டத்தட்ட அறிவித்தே விட்டது. கொதித்துக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே.

ரமேஷ் மாஸ்டர் மனைவி தொடுத்த வழக்கு!

ரமேஷ் மாஸ்டரின் மனைவியும், சூசையின் தங்கையுமான வத்சலா தேவி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். நியூயார்க்கின் தெற்கு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வத்சலா ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில், ‘என் கணவர் ரமேஷை இலங்கை ராணுவம் இறுதிப்போர் முடிந்தவுடன் உயிரோடு பிடித்துச் சென்றது. என் கணவருடன் பல வீரர்களும் ஒரே வண்டியில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களை எங்கு கொண்டுபோனார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. யாருக்குமே அது தெரியாது. ஒரு வருடம் கழித்து என் கணவரை இலங்கை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து அடித்து துன்புறுத்தி விசாரணை செய்யும் ஒரு வீடியோ வெளியானது. அதன்பிறகு என் கணவரின் நிலை என்னவென்று எனக்குத் தெரியாது. இப்போது அவர் உயிரோடு இல்லை என்பதை இலங்கை அரசே சொல்லிவிட்டது. போரில்தான் இறந்தார் என்று இலங்கை அதிபர் சொல்கிறார். ஆனால், அவரை சித்ரவதை செய்தே கொன்றிருக்கிறார்கள். இதற்கு நியாயம் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட மன்ஹாட்டன் நீதிமன்றம் ராஜபக்ஷேவுக்கும், ராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியது. இதனாலேயே ராஜபக்ஷே தன் அமெரிக்க பயணத்தை அப்போது ஒத்திப்போட்டார்.

No comments:

Powered by Blogger.