சோகத்தில் முடிந்த காதல் கதை: அமெரிக்க மனைவியை கொன்று தற்கொலை செய்த ஆட்டோ டிரைவர்
ஆக்ராவைச் சேர்ந்தவர் பண்ட்டி (35). சொந்தமாக ஆட்டோ ரிக்சா வைத்துள்ளார். இவரது மனைவி அரியன்னே வில்லிங்கர்(35). அமெரிக்காவைச் சேர்ந்த வில்லிங்கர், கடந்த வருடம் ஜுலை மாதம் தனது சக நாட்டவர்களுடன் இந்தியா வந்தார்.
அப்பொழுது பண்ட்டியும் அரியன்னாவும் காதலித்து பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ஒரு நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கணவன்-மனைவியாக ஷாஹீத் நகரில் வாழ்ந்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனினும் இருவரும் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அரியன்னேவை சந்தித்த பண்ட்டி அவரை ஆட்டோரிக்சாவில் ஏற்றி ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வண்டியை நிறுத்திய பண்ட்டி, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரியன்னேவை குத்திக் கொலை செய்துள்ளார். பிணத்தை சாலையோரம் வீசிவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் வீட்டுக்கு சென்ற பண்ட்டி கதவைப் பூட்டிக்கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைத்துக்கொண்டார். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, பண்ட்டி தீயில் கருதி இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேசிய மற்றும் கலாச்சார பண்பாடுகளை கடந்த இந்தக் காதல் ஜோடியின் முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments: