Header Ads

தினமலர் விமர்சனம் » கோச்சடையான்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' '3டி' அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது!

கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று 'சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்' எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான் ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் 'கோச்சடையான்', 'ராணா', 'சேனா' என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம் போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் பார்ப்போம்...

பல நூறு ஆண்டுகளாக அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும் பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை இருந்து வருகிறது... கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே, வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான் எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன் ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். ஜாக்கியின் மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் 'ராணா' ரஜினி, தங்கள் கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும் கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி. அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து., கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும் சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், 'ராணா' ரஜினியின் அப்பா, 'கோச்சடையான்' ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர் போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...

அப்பா கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் 'ராணா' ரஜினி எப்படி சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி 'கோச்சடையான்' புகழ் பிடிக்காமல் 'கோட்டைப்பட்டினம்' மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன? கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன சம்பந்தம்? அந்த சபதத்தை 'ராணா' ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்? கோச்சடையானின் எதிரி, துரோகிகளை 'ராணா' ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா படுகோன் யார்? அவரை 'ராணா' ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி? சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? மூத்த மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் 'ராணா' வீரனாக திகழ்வது எப்படி? எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் 'கோச்சடையான்' படத்தின் க்ளைமாக்ஸில் வந்து சேரும் 'சேனா' ரஜினி - 'ராணா' ரஜினியின் மோதலை 'கோச்சடையான்' பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...) பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், ''மாறுவது ஒன்றே மாறதது'', ''சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம்'', ''வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்...'' உள்ளிட்ட 'பன்ச்'கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் 'கோச்சடையான்', 'ராணா' என ரஜினி ஜொலித்திருக்கிறார்.

ரஜினிக்கு இணையாக, தீபிகா படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும் தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!

சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

'கோச்சடையான்' , 'சேனா', 'ராணா', 'செங்கோடகன்', 'வீர மகேந்திரா', பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ், பேஷ்!

மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.

லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு 'பெப்' தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் 'கோச்சடையான்' ஜெயித்திருக்கிறான்!

சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது 'கோச்சடையான்'!

ஆகமொத்தத்தில், ''கோச்சடையான்'' - ''கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!''

No comments:

Powered by Blogger.