Header Ads

தேர்தல் தோல்வி எதிரொலி: மண்டியாவில் வீட்டை காலி செய்தார் நடிகை ரம்யா

மண்டியா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக ரம்யா இருந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மண்டியா தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் ரம்யா தோல்வி அடைந்தார். அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் புட்டராஜுவிடம் தோல்வியை தழுவினார்.

மண்டியா வித்யாநகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரம்யா வசித்து வந்தார். தற்போது தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்த வீட்டை அவர் காலி செய்து உள்ளார். கட்சியில் ஒரு தரப்பினர் எதிராக செயல்பட்டதே ரம்யா தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் தோல்வியால் துவண்டு போய் உள்ள தன்னை கட்சியினர் யாரும் சந்தித்து தேற்ற முன்வராததை தொடர்ந்து அவர் வீட்டை காலி செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகை ரம்யாவின் தோல்விக்கு மந்திரி அம்பரீசே காரணம் என்ற வாசகத்துடன் கூடிய பிளக்ஸ் போர்டு மற்றும் பேனர் மத்தூர் டி.பி.சர்க்கிளில் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், அம்பரீஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விரைந்து வந்து, சர்ச்சைக்குரிய அந்த பிளக்ஸ் போர்டு மற்றும் பேனரை அகற்றினார்கள்.

பின்னர் அவர்கள் கூறுகையில், 'ரம்யா தோல்விக்கு அம்பரீஷ் காரணம் இல்லை. அம்பரீசின் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று இருந்தது. முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் சொந்த தொகுதியில் தான் பின்னடைவு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய பேனரை வைத்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்' என்றனர்.

தேர்தல் தோல்வியை தொடர்ந்து நடிகை ரம்யா வீட்டை காலி செய்தது, மந்திரி அம்பரீசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய பேனர் உள்ளிட்டவை மண்டியா காங்கிரசில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.