Header Ads

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்மன்

மான் கராத்தே' படத்தில் குத்துச்சண்டை போட்டியை அவதூறாக சித்தரித்துள்ளதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் சிவகார்த்தியேனுக்கு ஜார்ஜ் டவுண் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர், சென்னை ஜார்ஜ் டவுண் 15-வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது, தெற்கு ரெயில்வேயில் பணியாற்றி வருகின்றேன். பல கட்டுப்பாட்டு, விதிமுறைகள், மரபுகளை பின்பற்றி குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அண்மையில், வெளியான 'மான் கராத்தே' என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதில், இந்த கவுரவமிக்க குத்துச்சண்டை போட்டியை கேலி செய்யும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயனும், நடிகர் வம்சி கிருஷ்ணாவும் குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வருகிறது.

அதில், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்றால், உன் தோழியை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்ற வசனமும், வெற்றி பெறுவதற்காக எதிராளியிடம் கெஞ்சுவது போல காட்சியும் இடம் பெற்றுள்ளது.

அதேபோல சர்வதேச அளவில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பவர் போதை மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் உள்ளன. பல கட்டுப்பாடுகள், மரபுகளை பின்பற்றி கண்ணியமான முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த போட்டியை அவதூறாக சித்தரித்து 'மான் கராத்தே' படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், வசனம் எழுதி இயக்கிய திருமுருகன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், வம்சி கிருஷ்ணா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வருகிற 30-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகயேன், திருகுமரன், வம்சி கிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.