Header Ads

பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!” வேலூர் சிறையிலிருந்து நளினி

சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' - நளினியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சோகம் கவிந்திருக்கும் அதே சமயம், அபாரத் தீர்க்கமும் சேர்ந்திருக்கிறது.
''குற்றம் செய்யாத என்னை, இத்தனை வருடங்கள் சிறைக்காவலில் அலைக்கழித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை'' என்று கதறும் நளினி, சிறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் விடுதலைப் போராட்டத்துக்கான முனைப்பிலேயே கழிக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, விடுதலையின் வாசல் வரை சென்றும், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியதால் இன்னும் சிறையில் இருக்கிறார். தந்தையைப் பார்ப்பதற்கு பரோலும் மறுக்கப்பட்ட நளினியிடம், வழக்கறிஞர் உதவியோடு எடுத்த பேட்டி இது.

''சிறைவாசம் எப்படி இருக்கிறது?''
''ஒரு மனிதனை பல ஆண்டுகள் கட்டிவைத்தாலோ, இருட்டறையில் அடைத்துவைத்தாலோ, வானம் தெரியாத இரும்புக் கூரையின் கீழ் வாழவைத்தாலோ அவன் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகிவிடுவான். நான் 23 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் இருக்கிறேன். ஓர் ஆயுள் தண்டனைக் கைதிக்குரிய எந்தச் சலுகைகளும் எனக்கு வழங்கப்படவில்லை. எனக்கு வழங்கவேண்டிய விடுமுறைக்குக்கூட நான் நீதிமன்றத்தில் போராட வேண்டியுள்ளது. சிறை, அதன் அளவில் வகுத்துள்ள சுதந்திரத்தைக்கூட எனக்கு வழங்கவில்லை. நான் இங்கு எவருடனும் பேச முடியாது.
வேலூர் பெண்கள் சிறையில், 10 முதல் 12 குழந்தைகள் வரை இருக்கிறார்கள். என்னைப் போன்ற கைதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் அவை. அந்தக் குழந்தைகளை நான் தொட்டுத் தூக்கவோ, கொஞ்சவோ கூடாது. என் சுதந்திரத்தின் அளவை, அதன் தன்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
பெண் சிறைவாசிகளும் என்னைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இங்குள்ள பெரும்பாலான பெண் கைதிகள், சபிக்கப்பட்டவர்கள்; அவ்வப்போது வந்து செல்கிறவர்கள். சிறைக்குள் வந்துவிட்ட பிறகு பெரும்பாலும் சமூகமும் உறவுகளும் அவர்களைக் கைவிட்டுவிடுவதால், சிறை அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே விடுதலை என்று அவர்களை, கடவுளைப் போல நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். அது பயமும் மிரட்சியும் கலந்த பக்தி.
'இவளால்தான் ஆயுள் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு கிடைப்பது இல்லை; இவளால்தான் நமக்கும் பரோல் விடுப்பு கிடைப்பது இல்லை’ என்று நம்ப வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் என்னோடு பேசத் தயங்குகிறார்கள். உணர்வுகளை மரத்துப்போகச் செய்யும் சிறை வாழ்வில், மாதம் இரு முறை என் மகள் அரித்ராவுக்கு நான் எழுதும் கடிதங்களும், கடவுளோடு என் பிரார்த்தனைகளுமே நான் சிதைந்துபோகாமல் காப்பாற்றி வருகின்றன!''
''நீங்கள் பரோலில் வெளிவருவதை உங்களின் உறவினர்களே விரும்பவில்லையாமே?''
''அப்படி இல்லை. என் அப்பாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவரைப் பார்ப்பதற்காக பரோல் கேட்டேன். என்னை பரோலில் விட்டால், கூடவே 50, 100 காவலர்கள் ஒரு பட்டாளம் போல் என் பின்னால் வருவார்கள். நான் எங்கு தங்குகிறேனோ, அங்கே அவர்கள் காவல் இருப்பார்கள். செலவு அதிகமாகும் என்பது ஒரு பயம். இன்னொரு பயம், தேவை இல்லாமல் இன்னும் ஏதேனும் பிரச்னைகள் வருமோ என்பது. என் பரோல் மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதை நான் சட்டரீதியாகவே சந்திக்க விரும்புகிறேன்!''
''சிறை நன்னடத்தை விதிகள் எந்த வகையிலாவது உங்கள் விடுதலையைப் பாதிக்குமா?''
''அப்படி ஒரு பழியைச் சுமத்த முயன்றார்கள். இன்று அந்த நிலை இல்லை. எந்த விதத்திலும் என்னை விடுதலை செய்துவிடக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளாக அடுக்கடுக்காகச் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். முதலில் தண்ணீர் பிடிக்கப்போன இடத்தில் நான் பிரச்னை செய்ததாகச் சொன்னார்கள். பிறகு, என் கணவர் முருகனை, சிறைத் துறைக்கு எதிராகத் தூண்டிவிட்டதாகச் சொன்னார்கள். மொபைல் பயன்படுத்தினேன் என்றார்கள். இவற்றை நீதிமன்றம் கண்டித்து நிராகரித்தது. சிறை விதிகள் அனுமதிக்கும் சலுகைகளைக்கூட எனக்குக் கொடுப்பது இல்லை. மேலதிகமாக எந்த உரிமைகளையும் நான் கேட்டுப் பெறவில்லை. ஆனாலும், என் நடத்தை மீது களங்கம் கற்பிப்பதில் சிலர் குறியாக இருந்தார்கள்!''
''உங்கள் மகள் அரித்ராவுக்கு 23 வயதாகிவிட்டது. அவருடைய எதிர்காலம் குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?''
''அரித்ராவை நான் பார்த்தே எட்டு வருடங்கள் ஆகின்றன. நாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாள். எங்களைச் சந்திப்பதற்காக அவள் விசாவுக்கு விண்ணப்பித்தபோதும், அதைக் கொடுக்கவில்லை. 15 நாள்களுக்கு விசா அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், தரவில்லை. இப்போது பட்டப்படிப்பை முடித்திருக்கிறாள். மேற்படிப்பா, வேலையா என்பதை அவளே முடிவு செய்வாள். முழுமையான ஒரு வாழ்வை அவளுக்குப் பரிசாக அளிக்க முடியாவிட்டாலும், அவளது வாழ்க்கையே, எங்கள் எதிர்கால அடிப்படை என்பதை மட்டும் உணர்ந்திருக்கிறேன்!''
''முருகனைக் காதலித்ததால்தான் நீங்கள் தண்டிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா?''
''ஆமாம்... நிச்சயமாக! கடைசி வரை என் காதலில் உறுதியாக இருந்தேன். நான் காதலித்த போது அவர்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். மொழி புரியாதவர்களுக்கு, நான் என்னால் ஆன உதவிகளைச் செய்ததைத் தவிர, எனக்குத் தெரிந்து நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பின்னர், என் கணவரிடம் இருந்து என்னைப் பிரித்து, அவருக்கு எதிராக என்னைப் பயன்படுத்த முயன்றார்கள். நான் மட்டுமல்ல, இந்த வழக்கின் தேவைக்காகப் பல குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. சிலர், போலீஸாரின் அழுத்தங்களையும் மீறி குடும்ப வாழ்வில் உறுதியாக நின்றார்கள். வேறு சிலர் பிரிந்துபோனார்கள்!''
''வேலூர் சிறையில் பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபோது, என்ன பேசிக்கொண்டீர்கள்?''
''அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க நினைக்கிறேன். அந்தச் சந்திப்பையொட்டி உருவாக்கப்பட்ட செய்திகளும் கருத்துகளும் எனக்குள் மோசமான விளைவுகளை உருவாக்கி விட்டன. அதனால் பட்ட வேதனைகளை, வலிகளை நான் மட்டுமே அறிவேன்.

அன்று சிறையில் அசாதாரணமான சூழல் நிலவியது. நடமாடுவதைத் தடைசெய்து அனைத்து கைதிகளையும் சிறைக்குள் அடைத்தார்கள். திடீரென சிறைக் கண்காணிப்பாளர் அழைப்பதாகச் சொல்லி, என்னை அழைத்துச் சென்றார்கள். அவரின் அறைக்குள் சென்றபோது அங்கு ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நான் சென்றதும் சிறைக் கண்காணிப்பாளர் எழுந்து வெளியில் சென்றுவிட்டார். வந்திருந்தவர், தன்னை 'பிரியங்கா காந்தி’ என்று அறிமுகம் செய்துகொண்டபோது நான் குழம்பிவிட்டேன். 'இவருடன் பேசுவதா... வேண்டாமா?’ என்று யோசிக்கத் தொடங்கினேன். ஆனால், சிறைக் கைதிக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த எனக்கு, அந்தச் சூழ்நிலையில் அவருடன் பேசுவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பற்றியும், விசாரணை முறை பற்றியும் எனது காதல், திருமணம் எல்லாம் பற்றியும் பிரியங்கா கேட்டார். 'உங்கள் தந்தை கொலையில், நான் மட்டும் அல்ல, முருகன், சாந்தன், பேரறிவாளனும் நிரபராதிகள்தான்’ என்றேன். அதை அவர் நம்பினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சந்திப்பு முழுவதும் கொந்தளிப்பான ஒரு மனநிலையில் அவர் இருந்தார். ஒரு தந்தையை இழந்த இளம் பெண்ணின் வேதனையாகவோ, மன எழுச்சியாகவோ அது இருக்கலாம். நான் அதை அப்படித்தான் புரிந்துகொண்டேன்.
பிரியங்காதான் என்னை விரும்பிச் சந்தித்தார். ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான பழியை மட்டும் நான் சுமந்துகொண்டிருக்கிறேன். அவரவர் லாபங்களுக்காக, என்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்!''
''பிரியங்காவுடனான அந்தச் சந்திப்புதான் உங்களுக்கும் முருகனுக்கும் இடையில் மனக்கசப்பை உருவாக்கியதா?''
''எந்த உறவுகளுக்குள்தான் மனக்கசப்போ, மனக்காயமோ இல்லை? திருமணம் செய்து நாங்கள் சேர்ந்து வாழ்ந்தது நான்கே நான்கு நாள்கள்தான். இரு வேறு சிறைகளில் 23 ஆண்டுகளாக இருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, மனக்கசப்பு ஏற்படாமல் இருக்குமா? மன வருத்தங்கள் இருந்தது உண்மை. ஆனால், அதற்கு பிரியங்காவின் சந்திப்பு காரணம் அல்ல... வேறு சில பிரச்னைகள்தான் காரணம். அவையும் இப்போது சரியாகிவிட்டன. எங்க ளுக்குள் இப்போது எந்தப் பிரச்னை யும் இல்லை. பிரச்னை எல்லாம் இந்த '810’ என்ற எண் குறிக்கப்பட்ட கைதி உடைதான்!''

No comments:

Powered by Blogger.