Header Ads

தியேட்டர் விசிட்: ரசிகர்களை திருப்திபடுத்தினார் கோச்சடையான்: நிஜ ரஜினியை பார்த்ததாக பூரிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. முதல் அனிமேஷன் படம் என்பதாலும், ரஜினியின் உருவம் மட்டுமே நடித்திருப்பதாலும் இதனை ரசிகர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்று தயாரிப்பாளர்களுக்கு கூட சிறிது அச்சம் இருந்தது. ரஜினி நேரடியாக திரையில் தோன்றி ஆக்ரோஷமாக சண்டைபோடும்போதும், பன்ஞ் டயலாக் பேசும்போதும் கைதட்டி ஆரவாரம் செய்யலாம். அவரது நிழல் உருவம் தோன்றும்போது அதை எப்படிச் செய்வது என்று ரசிகனுக்கும் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த இரண்டும் நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.

ரசிகர்கள் உற்சாகம்

கோச்சடையான் ரிலீசான அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் ரஜினியின் நேரடி படம்போன்ற உற்சாகத்துடன் படம் பார்த்தனர். குதிரை வண்டியில் ரஜினி மலையை தாண்டி குதித்து நிற்கும் அந்த அறிமுக காட்சியில் மலர்களையும், பேப்பர் துண்டுகளையும் வீசியும், உற்சாகமா கூக்குரலிட்டும் ஆரவாரம் செய்தனர். கோச்சடையான் சிவதாண்டவம் ஆடும் காட்சியில் ரசிகர்கள் விசில் சத்தம், ஆட்டம் முடியும்வரை தொடர்கிறது.

"நீ போகலாம் என்பவன் மனிதன் வா போகலாம் என்பவன் தலைவன் நீ மனிதனா தலைவனா?" என ரஜினி பேசும் போது "தலைவா... நீ வா தலைவா சேர்ந்து போவோம்..." என்று கூச்சலிட்டார்கள். "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று பேசும்போது "நீ மாறு தலைவா" என்கிறார்கள்.

தியேட்டர் விசிட்

இனி ரசிகர்கள் பார்வையில் கோச்சடையான்... (தியேட்டர் விசிட்டில் திரட்டியவை)

சென்னை சாந்தி தியேட்டரில் படம் பார்த்து திரும்பிய ரஜினி ரசிகர் தேவேந்திரன்: "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் சார் சூப்பர் ஸ்டார் நடிச்சாலும் படம்தான், அவர் உருவம் நடிச்சாலும் படம்தான். அதான் படத்துக்குக்கு முன்னாடியே அவர் படுற கஷ்டத்தை காட்டுறாங்களே சார். அதை பார்த்து எனக்கு அழுகையே வந்திடுச்சு தெரியுமா. இதே தியேட்டர்ல 100 வது நாள் அன்னிக்கும் வந்து பார்ப்பேன் சார்"

சத்யம் திரையரங்கில் படம் பார்த்து திரும்பிய சாப்ட்வேர் என்ஜினீயர் கணேச மூர்த்தி: "நான் ரஜினி ரசிகன் இல்ல இருந்தாலும் நம்ம சினிமா டெக்னிக்கலா அடுத்த பிளாட்பார்முக்கு போயிருக்கிறத பார்க்கலாமுன்னு வந்தேன். ரியலி சூப்பர். இன்னும் கொஞ்சம் டயம் எடுத்து பண்ணியிருந்தால் இன்னும் பெட்டரா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்"

ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்து திரும்பிய புதுப்பேட்டையில் இட்லி கடை நடத்தும் பரமேஸ்வரி: "எனக்கு ரஜினி படம்னா உசுரு. ஆனா இது பொம்மை படமுன்னு சொன்னாங்க. நல்லா இருக்கும் வாமேன்னு என் மவன் இட்டாந்தான். அச்சு அசலா அவர்தாங்க. பொம்மை மாதிரியெல்லாம் இல்லீங்க. இந்திக்கார புள்ளை ஒண்ணு ரஜினிக்கு ஜோடியா வருது பாருங்க. இன்னா அழகா கீது. கூட்டம் குறைஞ்சதும் இன்னொரு தபா பாக்கணும்"

அபிராமியில் படம் பார்த்து திரும்பிய கல்லூரி மாணவன் கோமதி நாயகம்: "நாங்க பிரண்ட்சுங்க 6 பேர் ரிசர்வ் பண்ணி பார்க்க வந்தோம். எங்களுக்கு படம்மேல கான்பிடெண்ட் இருந்ததாலதான் ரிசர்வ் பண்ணினோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்காங்க. புது எக்ஸ்பீரியன்சா இருந்திச்சு"

ஐநாக்சில் படம் பார்த்து திரும்பிய தேசிகாச்சாரி: "படம் நன்னா இருக்கா இல்லியாங்றது பிரச்னை இல்லை. நம்மவா நம்ம குழந்தை சின்ன வயசுல ஒரு பெரிய வேலையை எடுத்து பண்ணியிருக்கா. அவாளுக்கு நாம சப்போர்ட்டா இருக்கணுமோல்லியோ. அதான் வந்து பார்த்தேன். சும்மா சொல்லப்படாது பேஷா பண்ணியிருக்கா. டூ அவர்ஸ் போனதே தெரியல போங்க. அடுத்த வாட்டி மாமிய கூட்டிண்டு வரணும்"

எஸ்கேப்பில் படம் பார்த்துவிட்டு பெற்றோருடன் திரும்பிய 4 வயது சுவேதா: "அங்கிள் நாங்க முதல் ஷோவே பார்த்துட்டோம். அதுவும் 3டியில. ரஜினி அங்கிள் என்கிட்ட வந்து பேசினாரு, அவர் த்ரோ பண்ற அம்பு கண்ணுக்கு நேரா வந்திச்சா நான் பயந்தே போயிட்டேன். நாசர் அங்கிள்தான் மோசம் ரெண்டு ரஜினி அங்கிளையும் டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருக்காரு. படம் முடிஞ்சு வெளியில வந்ததும் என் அக்கா டென்த்துல 490 மார்க் எடுத்த ரிசல்ட் வந்துச்சு. இப்போ சொல்லுங்க ரஜினி அங்கிள் லக்கி மேன்தானே..."

முக்கிய காரணம்

கோச்சடையான் ரஜினியின் பொம்மை படம் என்கிற வாதத்தை முறியடிக்கிற விதமாக இந்தப் படம் உருவான விதம் பற்றியும் அதில் ரஜினி நடிப்பது பற்றியுமான ஒரு முன்னோட்டத்தை படத்திற்கு முன்னதாக திரையிடுகிறார்கள். அதில் ரஜினி உடல் முழுவதும் எலக்ட்ரில் வயர்களை சுற்றிக் கொண்டு ஆக்ரோஷமாக நடிப்பது, அம்பு எய்வது, சண்டைபோடுவது, நடனமாடுவது என அனைத்தையும் செய்கிறார். இதை பார்த்த உடனே இது ரஜினி நடித்த படம்தான் என்ற முடிவுக்கு ரசிகன் வந்து விடுவதே படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.