எம்.ஹெச் 370 தேடல்: புதிய இலக்கில் விமானத்தின் பாகங்களை கண்டது சீனா
இந்திய பெருங்கடலில் நொருங்கி விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி நேற்றிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தேடலில் ஈடுப்பட்டிருந்த சீன விமானம் 3 பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது.
இது குறித்து சீன பாதுகாப்புத்துறை அதிகாரி கூறுகையில், "இந்திய பெருங்கடற்பரப்பின் பெர்த் பகுதியிலிருந்து 1100 கீ.மீ தொலைவில் நேற்று இரவு சீன ராணுவ விமானமான இல்யூஷின் - 76, நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில் செவ்வக வடிவிலான சில பொருட்கள் மிதப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த பாகங்கள் எம்.ஹெச் 370 விமானத்தின் சிதறல்களா அல்லது மீன்பிடி தொழிலாளர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களா என்பது குறித்து ஆராய வேண்டி உள்ளது" என்றார்.
தேடலில் சுணக்கம்
தேடல் பகுதியில் இன்று கடும் காற்று வீசி வருகிறது. பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீண்டும் விமானத்தை தேடும் பணி நிறுத்த படலாம் என்று கூறப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் இந்திய பெருங்கடலில் இன்று வானிலை மாற்றம் நிகழும் என்றும் குளிர் காற்று வீச வாய்ப்புள்ளது. இந்த சூழல் ஞாயிறு வரை நீடிக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேடல் பகுதி மாற்றம்
மலேசிய விமானம் எம்.எச் 370 முன்பு யூகிக்கப்பட்டதை விட வேகமாக பயணத்திருக்கலாம், இதனால் எரிபொருள் விரையாமாகி தேடப்பட்டுவந்த பெர்த்திலிருந்து 1,850 கீ.மீ தொலைவில் விமானம் விழுந்திருக்கலாம் என்று சில ஆய்வுகளின் மூலம் முடிவிற்கு வந்திருக்கிறோம்.
புதிய தேடும் பகுதியில் 122 பாகங்கள் மிதப்பது போலான பிரான்ஸ் செயற்கைகோள் படமும் இதனுடம் ஒத்துப்போவதால் தற்போது தேடலில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.
கருப்புப் பெட்டி
மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுள்ளனர்.
எம்.ஹெச் விமானம் மாயமாக மூன்று வார காலமாகி உள்ள நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கருப்பு பெட்டியிலிருந்து வெளிவரும் சிக்னலை கண்டறியும் ப்ளுபின் - 21 உபகரணம் தற்போது பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது.கருப்புப் பெட்டி கிடைத்தால் விமானியின் ஒலிப் பதிவு மற்றும் விமான பயன்பாட்டின் பதிவு தரவுகள் கிடைத்திவிடும்.
ஆனால் கருப்புப் பெட்டியின் சிக்னலையும் இதுவரை கணிக்கமுடியவில்லை. கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாதத்தில் செயலிழந்து விடும் என்பதால் இந்த தேடலில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
No comments: