கள்ளக்காதலை கண்டித்த கணவரை பாலில் விஷம் கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை
பாலில் விஷம் கலந்து கொடுத்து கணவரின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவிக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.
கள்ளக்காதல்
மும்பையை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி ஜோதி (வயது 27). ஜோதிக்கும், ஜீவன் வராகடே என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதையறிந்த விஜய், தன் மனைவி ஜோதியை கண்டித்தார். இதனால் ஜோதி தன் கணவரை தீர்த்துக்கட்ட எண்ணினார். இது குறித்து தன் கள்ளக்காதலன் ஜீவன் வராகடேவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து விஜயை கொலை செய்ய திட்டம் தீட்டினார்கள். இந்தநிலையில், கடந்த 2007–ம் ஆண்டு ஜூன் 14–ந் தேதி இரவு பாலில் விஷத்தை கலந்து ஜோதி தன் கணவருக்கு கொடுத்தார்.
கழுத்தை நெரித்து கொலை
அதை குடித்த விஜய் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஜோதி, தொட்டு தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல், அவரது கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, விஜயின் சகோதரர் அபய் என்பவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் தகராறில் மனைவியே கணவரை கொலை செய்தது அம்பலமானது. இந்நிலையில், ஜோதியை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலன் ஜீவன் வராகடேவையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
ஆயுள் தண்டனை
வழக்கு விசாரணையில், ஜோதி மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆனதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜோதியின் கள்ளக்காதலன் ஜீவன் வராகடேவுக்கு எதிரான குற்றச்சாட்டு போதிய அளவில் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், செசன்சு கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஜோதி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தஹில்ரமணி மற்றும் ஆச்சிலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.
No comments: