தேர்தல் களத்தில் சினிமா நட்சத்திரங்கள்...
பொழுதுபோக்குதுறையில் முதல் இடம் வகிப்பது எது? என்று கேட்டால், அனேகமாக எல்லோருடைய பதிலும் இதுவாகத்தான் இருக்கும்.
இதனால் சினிமா துறையில் இருப்பவர்கள் பிற துறைகளில் இருக்கும் வல்லுனர்களை விட எளிதில் பிரபலமாவதோடு மக்கள் மனதிலும் இடம்பிடித்து விடுகிறார்கள். இது, மக்கள் சேவை செய்வதற்காக அவர்கள் அரசியலில் நுழைவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
அந்த வகையில் திரைப்பட துறையைச் சேர்ந்த பலர் அரசியலில் நுழைந்து பெரும் சாதனை படைத்து இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில் இதற்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் விளங்கிய மாநிலம் தமிழ்நாடு. சினிமா துறையில் முடிசூடா மன்னனாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டு காலம் முதல்–அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தினார். அவரது மனைவி ஜானகி அம்மாளும் சில காலம் முதல்–அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்து பின்னர் அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா தற்போது முதல்–அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க.வை தொடங்கிய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரும் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தியவர்களே.
நடிகர்கள் விஜயகாந்த், சிவாஜி கணேசன், சரத்குமார், பாக்கியராஜ், டி.ராஜேந்தர்.... என்று திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டைப் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில், நடிகர் என்.டி.ராமராவ் 1982–ம் ஆண்டில் ‘தெலுங்கு தேசம்‘ என்ற கட்சியை தொடங்கி 10 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார், நடிகர் சிரஞ்சீவி மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாக இருக்கிறார். நடிகர் ராஜசேகர், நடிகைகள் ஜீவிதா, ரோஜா போன்றோரும் அரசியலில் உள்ளனர்.
கர்நாடகத்தில் நடிகர் அம்பரீஷ் அரசியலில் குதித்து மத்திய மந்திரி ஆனார். தற்போது கர்நாடக மந்திரியாக பதவி வகித்து வருகிறார். கன்னட நடிகை உமாஸ்ரீயும் அரசியலில் ஈடுபட்டு மந்திரி பதவி வகிக்கிறார். நடிகை ரம்யா மண்டியா தொகுதியின் எம்.பி.ஆனார். இப்போது அவர் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அரசியலில் குதித்து காங்கிரஸ் எம்.பி.யாக சில காலம் பதவி வகித்தார். சுனில்தத், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, சத்ருகன் சின்கா, ராஜ்பாப்பர், கோவிந்தா, ஹேமமாலினி, ஜெயபாதுரி, ஜெயப்பிரதா என்று பலரும் திரைத்துறையில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர்களே.
திரையில் ஜொலித்த பல நட்சத்திரங்கள் அரசியலில் ஜொலிக்காமல் போனதும் உண்டு.
நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சினிமா துறையைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகன் சினிமா நடிகர்தான். பிரபல ஹாலிவுட் கதாநாயகனான அர்னால்டு அரசியலில் குறித்து அமெரிக்காவில் மாகாண கவர்னர் ஆனார்.
இப்படியாக நம் நாட்டில்தான் என்றில்லாமல் வேறு பல நாடுகளிலும் சினிமா பிரபலங்கள் அரசியலில் ஈடுபட்டு சாதனை படைத்து இருக்கிறார்கள். என்றாலும் நம் நாட்டில் இந்த ஈடுபாடும், ஆர்வமும் கொஞ்சம் அதிகம். அதுவும் தேர்தல் சமயத்தில் சினிமா நட்சத்திரங்களின் அரசியல் படையெடுப்பு சற்று அதிகமாக இருக்கும்.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில், அதிக அளவில் சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ், பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் சினிமா பிரபலங்களை களத்தில் இறக்கி இருக்கின்றன.
சினிமா நட்சத்திரங்களின் பட்டியலில் சத்ருகன் சின்கா, ராஜ்பாப்பர், ஹேமமாலினி போன்றவர்களுடன் புதிதாக கிரண் கெர், குல்பனாக், மூன்மூன் சென் போன்ற மேலும் பலரும் தேர்தல் களத்தில் குதித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் ‘புதிதாக ஜன சேனா‘ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து அவருக்கு பவன் கல்யாண் தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.
சண்டிகார் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர்ரின் மனைவி கிரண் கெர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நடிகை குல் பனாக்கை தனது வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் போட்டியிடுகிறார். இவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பாரதீய ஜனதா சார்பில் நடிகர் சத்ருகன் சின்கா பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியிலும், ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியிலும், தேர்தல் களத்துக்கு புது வரவான பரேஷ் ரவால் குஜராத் மாநிலம் ஆமதாபாத் கிழக்கு தொகுதியிலும், ஜாய் பானர்ஜி மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் தொகுதியிலும், பபுல் சுப்ரியோ அசன்சால் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் எம்.பி. நடிகர் வினோத் கன்னா பீகார் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில், ‘பாட்ஷா’, ‘காதலன்’, ‘மேட்டுக்குடி’ உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள நடிகை நக்மாவை தனது வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறது. நடிகர் ராஜ்பாப்பர் அந்த மாநிலத்தில் உள்ள காஜியாபாத் தொகுதியிலும், பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷண் ஜான்பூர் (உ.பி.) தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
தேசிய கட்சிகளுடன் போட்டி போடும் அளவுக்கு மேற்கு வங்காள முதல்–மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் அதிக அளவில் திரையுலக பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறார்.
நடிகை மூன்மூன் சென் பங்குரா தொகுதியிலும், சந்தியா சென் மிட்னாப்பூர் தொகுதியிலும், பிஸ்வஜித் நியூடெல்லி தொகுதியிலும், தேவ் மேற்கு வங்காள மாநிலம் கட்டால் தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். மேலும் பிரபல பாடகர்கள் சவுமித்ரா ராய், இந்திரானி சென் ஆகியோரையும் திரிணாமுல் காங்கிரஸ் தனது வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறது.
விழிப்புணர்வு பிரசார படத்தில் கமல்ஹாசன்
80 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு தேசத்தில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இது ஒரு இமாலயப்பணி ஆகும். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முறைகேடுகள் எதுவும் இன்றி தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் அயராது பாடுபடுகிறது. என்றாலும் அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போடுவது இல்லை.
இதனால் வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கு கொண்டு ஒட்டுப் போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வற்புறுத்தி வருகிறது. வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களைத்தான் தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது. தமிழில், ஓட்டுப் போடுவதை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசார படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து உள்ளார்.
பிரபலமான ஒரு நபரை வைத்து ஒரு விஷயத்தை சொல்லும் போது அது மக்களை எளிதில் சென்று அடைகிறது. இதற்காகத்தான் தேர்தல் மட்டும் என்றில்லாமல் அரசின் பிற விழிப்புணர்வு பிரசாரங்களுக்கும் சினிமா நட்சத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
அரசியலில் ஜொலிக்காத நட்சத்திரங்கள்
திரையுலகில் சாதனை படைத்த பல நட்சத்திரங்கள் அரசியலில் ஜொலிக்காமல் போனது உண்டு.
இந்த பட்டியலில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, கோவிந்தா, ராஜேஷ்கன்னா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரான அமிதாப்பச்சன் கடந்த 1984–ம் ஆண்டில், அவருக்கு ஆதரவாக அரசியல் தீவிரமாக ஈடுபட்டார். அந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் தொகுதியில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் அமிதாப்பச்சனின் பெயர் இழுக்கப்பட்டதால், குறுகிய நாட்களிலேயே அவர் வேதனையுடன் அரசியலில் இருந்து விலகினார்.
என்றாலும் தனது மனைவி நடிகை ஜெயபாதுரி அரசியலில் ஈடுபடுவதை அவர் தடுக்கவில்லை. அமர்சிங் மூலம் முலாயம் சிங்கின் சமாஜ்வாடியில் சேர்ந்த அவர் தற்போது அக்கட்சியின் சார்பில் டெல்லி மேல்–சபை உறுப்பினராக இருக்கிறார்.
கிட்டத்தட்ட அமிதாப்பச்சனின் நிலைதான் ராஜேஷ் கன்னாவுக்கும் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியின் வற்புறுத்தலின் பேரில் காங்கிரசில் சேர்ந்த ராஜேஷ்கன்னா 1991–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நியூடெல்லி தொகுதியில் பாரதீய ஜனதா தலைவர் அத்வானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அத்வானி புதுடெல்லி தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு நடந்த இடைத்தேர்தலில் ராஜேஷ்கன்னா மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 1996–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளர் ஜக்மோகனிடம் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் காங்கிரஸ் சார்பில் டெல்லி மேல்–சபை எம்.பி.ஆக விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த 2004–ம் ஆண்டு தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானவர் நடிகர் கோவிந்தா. சரிவர பாராளுமன்றத்துக்கு செல்வது இல்லை என்றும், தொகுதி மக்களை சந்திப்பது இல்லை என்றும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே சினிமா வாய்ப்புகளும் குறைந்தன. இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
தனது மனைவி நடிகை ஹேமமாலினியை தொடர்ந்து பாரதீய ஜனதாவில் சேர்ந்த தர்மேந்திரா 2004–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அவரும் சரிவர பாராளுமன்றத்துக்கு செல்வது இல்லை என்ற புகார் எழுந்தது. இதன் காரணமாக எழுந்த பிரச்சினைகளால், அரசியலில் குதித்தது குறித்து அவர் மிகுந்த வருத்தம் அடைந்தார்.
பழம் பெரும் நடிகர் சுனில் தத் காங்கிரஸ் அரசிலும், நடிகர் சத்ருகன் சின்கா பாரதீய ஜனதா அரசிலும் கேபினட் மந்திரிகளாக இருந்தவர்கள். சுனில் தத் தனது கடைசி காலம் வரை அரசியலில் நீடித்தார். சத்ருகன் சின்கா அரசியலில் நல்ல நிலையை அடைய இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.
சுனில் தத்தின் மகனான நடிகர் சஞ்சய் தத் திடீரென்று சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்தது. என்றாலும் அவரது அரசியல் வாழ்க்கை அற்ப ஆயுளில் முடிந்தது. மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
கேரளாவில் நிலைமை வேறு
பிற தென் மாநிலங்களைப் போன்று கேரளாவில் திரைப்பட துறையினர் அவ்வளவாக அரசியலில் ஈடுபடுவது இல்லை. அரசியலில் குதித்த ஒரு சில நடிகர்களும் பிரகாசிக்கவில்லை. அரசியல் மற்றும் சினிமா பற்றிய கேரள மக்களின் கண்ணோட்டம் தனித்தனியானது என்பதையே இது காட்டுகிறது.
பழம்பெரும் நடிகரான மறைந்த பிரேம் நசீர் காங்கிரசில் சேர்ந்தார். திரையுலகில் சாதித்த அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை.
நடிகர் முரளி 1999–ம் ஆண்டு தேர்தலில் ஆலப்புழை பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த தேர்தலில் பிரபல நடிகர் இன்னோசென்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சாலக்குடி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.சிசாக்கோவை எதிர்த்து போட்டியிடுகிறார்.இன்னோசென்ட் சாலக்குடி நகரசபை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார்.
தேர்தல் களத்தில் குதித்தது ஏன்?
திடீரென்று தேர்தல் களத்தில் குதித்தது ஏன்? என்பது குறித்து நடிகை நக்மா விளக்கம் அளித்து உள்ளார்.
‘‘நான் சினிமாவில் உச்ச நிலையில் இருந்த போதுதான் அரசியலுக்கு வந்தேன். 2004–ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த நான் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தல் பிரசாரமும் செய்து இருக்கிறேன். ஏற்கனவே தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது விரும்பம் இல்லை. இப்போது கட்சி கேட்டுக் கொண்டதால் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ என்று அவர் கூறி உள்ளார்.
சினிமா நட்சத்திரங்களால் அரசியலில் ஜொலிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
பிரசார பீரங்கிகள்
தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்கும், வாக்காளர்களை கவர்வதற்கும் சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்கள். இதனால் பல்வேறு கட்சிகள் பிரசாரத்துக்கு நடிகர்–நடிகைகளை களத்தில் இறக்குகின்றன. இந்த தேர்தலிலும் இது தொடர்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வுக்கு நடிகர்கள் ராமராஜன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்தராஜ், வையாபுரி, சிங்கமுத்து, குண்டு கல்யாணம், வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி, விந்தியா, சி.ஆர்.சரசுவதி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமாரும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
நடிகை குஷ்பு, நடிகர்கள் வாகை சந்திரசேகர், குமரி முத்து ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
தேர்தல் களம் களை கட்டவும், கூட்டம் சேரவும் நடிகர்–நடிகைகளின் பிரசாரம் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தங்கள் அபிமான நட்சத்திரங்களின் பேச்சை கேட்பதற்காக மட்டுமின்றி, அவர்களை நேரில் பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் கூடுகிறார்கள். ஆனால் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
கடந்த கால தேர்தல் பிரசார களங்களை திரும்பிப் பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
No comments: