சிங்கப்பூர், பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் கடத்தி வந்த ரூ.51 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை: சிங்கப்பூர், பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.51 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த சுவாமிநாதன் (38) என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று வந்திருந்தார். சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள், சுவாமிநாதனை நிறுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. அவர் அணிந்திருந்த ஷூக்கள் வித்தியாசமாக இருந்தது. அவற்றை கழற்றி சோதனையிட்டனர்.
இரு ஷூக்களின் அடிப்பாகங்களில் ரகசிய அறை வைத்து தைக்கப்பட்டிருந்தது. அவைகளை பிரித்து பார்த்தபோது மொத்தம் ஒரு கிலோ தங்கக்கட்டி இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம். இதையடுத்து அதிகாரிகள், அவரை கைது செய்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து, பாங்காங்கில் இருந்து மற்றொரு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 2 பேரை தனி அறைக்கு அழைத்து சென்று சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் களது ஆசனவாயில் 700 கிராம் தங்க கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.21 லட்சம். தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
No comments: