காங்கிரஸ்–பாரதீய ஜனதாவை எதிர்த்து பிரசாரம்: சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 7–ந்தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வருகிற 29–ந்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக் குழுவில் தேர்தல் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இது தொடர்பாக சீமான், மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:–
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. அதே நேரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நான் பிரசாரம் செய்வேன்.
பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை அது காவி கட்டிய காங்கிரசாகவே உள்ளது. கதர் கட்டிய பா.ஜனதாவாக காங்கிரஸ் இருக்கிறது. 2 கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஈழத் தமிழர் விவகாரத்தை 2 கட்சிகளுமே வேடிக்கை பார்த்தன. இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது எதிர்க் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா வேடிக்கைதானே பார்த்தது.
வெளியுறவு கொள்கைகளில் காங்கிரசும், பா.ஜனதாவும் ஒன்று போலவே செயல்பட்டு வருகின்றன.
நேரு, இந்திரா காலத்தில் இருந்தது போன்ற வெளியுறவு கொள்கை வேண்டும். போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதாக அது இருந்தது. அந்த வழியில்தான் வங்காளதேஸ் விடுதலை, தெற்கு சூடான் விடுதலை ஆகியவை சாத்தியமானது.
ஆனால் தற்போதைய வெளியுறவு கொள்கை, அடிவாங்கும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை காங்கிரஸ் காணாமலேயே போய் விட்டது. பா.ஜ.க. அணியால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. திராவிடக் கட்சிகள் செய்த தவறையே தே.மு.தி.க.வும் செய்துள்ளது. சட்டமன்றத்துக்கு மக்கள் விஜயகாந்தை அனுப்பி வைத்தனர். அவரால் என்ன செய்ய முடிந்தது.
இந்த நிலையில் பாராளு மன்றத்துக்கு போய் அவர் என்ன செய்யப் போகிறார்.
இந்தியா முழுவதுமே, காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு மாற்றாக மாநிலக் கட்சிகள் வலுப்பெற வேண்டும். அப்போதுதான் மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஏற்படும். தமிழகம் முழுவதும் 7–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை நான் பிரசாரம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு சீமான் கூறினார்.
No comments: