மறுமுனை.. சினிமா >> விமர்சனம்
நடிகர் : மாருதிநடிகை : மிருதுளா பாஸ்கர்இயக்குனர் : மாரிஷ் குமார்இசை : தாஜ்நூர்ஓளிப்பதிவு : புன்னகை வெங்கடேஷ்
நாயகன் மாருதியும், நாயகி மிருதுளாவும் ஒரு விபத்தின் போது சந்திக்க நேர்கிறது. அப்போதே நாயகனுக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. அந்த விபத்தின் போது நாயகனுடைய மொபைல் நாயகியிடமும், நாயகியின் மொபைல் நாயகனிடமுமாக மாறிவிடுகிறது. நாயகனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போன் பண்ணும்போது நாயகி எடுக்கிறாள். அப்பொழுது தான் இவர்களுடைய மொபைல் மாறிப் போனது இவர்களுக்கே தெரிய வருகிறது.
இந்நிலையில், ஒருவருக்கொருவர் மொபைல் நம்பரை தெரிந்துகொண்ட இருவரும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி தங்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடித்துப்போய்விடுகிறது. ஒருநாள் நேரில் சென்று தனது காதலை நாயகன் சொல்கிறான். நாயகியும் அதை ஏற்றுக்கொள்கிறாள்.
இவர்களுடைய காதல் நாயகியின் அப்பா சேரன்ராஜூக்கு தெரிகிறது. அவர் அதேஊரில் வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என ஒரு தாதாவாக வலம் வருகிறார். தனது மகள் சாதாரண கண்டக்டரின் மகனை காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், நாயகனுடைய அப்பாவை அழைத்து அவரை மிரட்டி அனுப்புகிறார். அதுமட்டுமில்லாமல், தனது மகளுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் என்று அதே ஊரில் உதவி கமிஷனரான ரஞ்சித்தை நாயகிக்கு நிச்சயமும் செய்துவிடுகிறார்கள்.
இதில் துளியும் விருப்பமில்லாத நாயகி, நாயகனுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்வதற்காக ஏற்காடு செல்கிறார்கள். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்குகிறார்கள். அப்போது அங்கு வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளியும் நாயகனை அடித்துப் போட்டுவிட்டு நாயகியை கற்பழித்து விடுகிறார்கள்.
தற்கொலை பண்ணிக்கொள்ள வந்த இடத்தில் தனது காதலிக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்பட்டுவிட்டதே என வேதனையில் துடிக்கும் நாயகன், இறுதியில், தனது காதலியை களங்கப்படுத்தியவர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் மாருதி பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கு இதுதான் முதல் படம் என்பது போல் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். நிறைய இடங்களில் அதிகபடியான நடிப்பை வெளிப்படுத்தி சலிப்பை ஏற்படுத்துகிறார். நாயகி மிருதுளா பாஸ்கர், வல்லினம் படத்தில் இருந்த ஈர்ப்பு இந்த படத்தில் இல்லை. எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ரஞ்சித், சேரன் ராஜ் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பை வைத்து படம் பார்க்க வருபவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறார் இயக்குனர். தலைப்புக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்துப்போன கதையையே படமாக கொடுத்திருப்பவர் காட்சியமைப்பிலாவது வேறுபடுத்தி காட்டியிருக்கலாம். அதிலும் பழமையை காட்டுவதால் சலிப்புதான் வருகிறது.
சத்ய தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலா பாடி, ஆடும் பாடல் துள்ளல் ரகம். சிம்புவின் குரலில் வரும் பாடலும் தாளம் போட வைக்கிறது. புன்னகை வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘மறுமுனை’ கூர்மையில்லை.
No comments: