5 பேரை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் பயிற்சிக்காக ஆக்ரா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
மத்திய பிரதேசம்–ராஜஸ்தான் மாநில எல்லையான குவாலியர் அருகே பறந்து சென்றபோது அந்த விமானம் திடீரென பாறை மீது மோதி, தரையில் விழுந்து நொறுங்கி, தீ பிடித்து எரிந்தது.
அந்த விமானத்தில் சென்ற 5 விமானப்படை அதிகாரிகளும் இந்த விபத்தில் பலியாகினர்.
விபத்துக்குள்ளான அந்த சி–130 ஜெ சூப்பர் ஹெர்குலஸ் விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாகும். அதிக சரக்குகளுடன் எந்த இடத்தில் இருந்தும் புறப்பட்டு சென்று, சவாலான இடங்களில் கூட பத்திரமாக தரையிறங்கும் இத்தகைய 6 நவீன விமானங்களை ஒவ்வொரு விமானமும் 965 கோடி ரூபாய் என்ற விலையில் இந்திய ராணுவம் வாங்கியிருந்தது.
குவாலியர் அருகே விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்து சேர வேண்டிய கடைசி தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த விமானப்படையின் உயரதிகாரிகள், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேடி வந்தனர்.
விபத்து நடந்த விமானம் நொறுங்கிக் கிடந்த சம்பல் ஆற்றங்கரைப் பகுதியில் அந்த கருப்பு பெட்டியை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அதில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், நிகழ்ந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பதை கண்டறியும் பணியில் விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
No comments: