இந்திய பெருங்கடலில் மிதப்பது மலேசிய விமான பாகமா?: சீன கப்பல் தேடுகிறது..
கடந்த 3 வாரங்களுக்கு முன்பு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியா உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்திய பெருங்கடலில் தென் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதாக சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் செயற்கை கோள்கள் போட்டோ எடுத்து காட்டின.
அதை தொடர்ந்து தேடுதல் பணி நடந்தது. இருந்தும் எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில் 1,100 கி.மீட்டர் தூரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பெர்த் நகரின் மேற்கில் 1,800 கி.மீட்டர் தூரத்தில் புதிதாக பல நிறத்தினால் ஆன பொருட்கள் மிதப்பதாக சர்வதேச நாடுகளை சேர்ந்த 5 விமானங்களின் தேடுதல் வேட்டையில் தெரிய வந்தது.
மிதக்கும் பொருட்கள் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் உள்ளன. அவை மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
எனவே, அவற்றை தேடும் பணியில் சீன ரோந்து கப்பல் ஈடுபட்டுள்ளது. அது தவிர மேலும் பல கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே நியூசிலாந்தின் ஓரியன் விமானம் நடத்திய தேடுதல் வேட்டையில் பல பொருட்கள் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை விமானபடை லெப்டினென்ட் ஜெனரல் ஜமின் பாகர் தெரிவித்துள்ளார். அவை மாயமான விமானத்தின் பாகங்களா? என உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
No comments: