Header Ads

கொடைக்கானலில் மதுவுடன் ஆபாச நடனம்: 3 பெண்கள் உள்பட 28 பேர் கைது

கொடைக்கானலில் மதுவுடன் ஆபாச நடனம் ஆடிய 3 பெண்கள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள், 7 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தீவிர கண்காணிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். கொடைக்கானலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், சமூகவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கொடைக்கானல் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் கொடைக்கானல் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் அதிக ஒளியுடன் மின்விளக்குகள் எரிவதாகவும், அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மதுவுடன் ஆபாச நடனம்

அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் 3 பெண்கள் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். மேலும் அவர்களுடன் ஏராளமான ஆண்களும் மதுபோதை மயக்கத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அந்த பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் விதத்தில் ராட்சத மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

உடனே போலீசார் விரைந்து சென்று ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

3 பெண்கள் உள்பட 28 பேர் கைது

ராஜூ (வயது 60), ரிசார்ட் உரிமையாளர், இவரது மகன் போதிசாதிவிக்நாத், கேரளாவை சேர்ந்த சிமிதி (18), சென்னை தி.நகரை சேர்ந்த ஹரிணி (18) சாலிகிராமத்தை சேர்ந்த நிவேதிதா (25), கொடைக்கானலை சேர்ந்த கெவின் (25), ஜாஹீர் (25), ராஜ்குமார் (25). சென்னையை சேர்ந்த ஸ்ரீசாந்த் (26), அனில் அலெக்சாண்டர் (26), ரோசன் (25), பிரசன்னகுமார் (25), சாரதி, சாஜிலால், அசோக்குமார், சஜீத்கான் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், 7 வாகனங்கள், ரூ.1 கோடி மதிப்புள்ள ஒளி, ஒலி பரப்பு சாதனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்டர்நெட் மூலம்

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரிசார்ட் உரிமையாளர்கள் ‘‘எலக்ட்ரிக் பாரஸ்ட்’’ என்ற பெயரில் அளவில்லா மதுவுடன் கூடிய விருந்து என்று இன்டர்நெட்டில் விளம்பரம் செய்துள்ளனர். இதில் தனி நபர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம், ஜோடிகளுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக வசூலித்துள்ளனர்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.