Header Ads

போதை ஊசி கும்பல் பிடியில் இளம்பெண்கள்

நித்திரவிளை : நித்திரவிளையில் போதை ஊசி விவகாரத்தில் கைதான, தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.குமரியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்திரவிளை போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, நித்திரவிளை சந்திப்பு பகுதியில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். இதில் அந்த இளம்பெண், வாலிபருக்கு போதை ஊசி மருந்துகளை கொடுத்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த போதை ஊசி மருந்துகள், சிரஞ்சுகள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். இவை அனைத்தும் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மயக்க மருந்துகளாகும்.

மேலும் விசாரணையில், நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் அலெக்ஸ் (26) என்பதும், ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த அஸ்வினி (23) நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிவதும் தெரியவந்தது. அந்த மருத்துவமனையில் இருந்துதான் இதுபோன்ற மருந்துகளை எடுத்து அலெக்சிடம் கொடுத்துவந்துள்ளார்.இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கைது செய்யப்பட்ட அலெக்சின் நண்பர் பென்னட். இவர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர், அஸ்வினிக்கும் அறிமுகம் ஆனவர். அதன் மூலம் இதுபோன்ற போதை ஊசி மருந்துகளை பெற்று தனது நண்பர்களுக்கு பென்னட் சப்ளை செய்துள்ளார். அந்த வகையில் தான் அலெக்சுக்கும் போதை ஊசி மருந்து பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பென்னட்டை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்னட் பிடியில் வாலிபர்கள் மட்டுமின்றி இளம்பெண்களும், மாணவிகளும் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.