சென்னையில் கொலை செய்யப்பட்ட சினிமா பைனான்சியர் உடல் தோண்டி எடுப்பு நடிகை சிக்குகிறார்
கொன்று புதைக்கப்பட்ட பைனான்சியர் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படும் நடிகை சுருதி சந்திரலேகா இன்னும் ஓரிரு நாளில் போலீசில் சிக்குவார் என்று தெரிகிறது.
சினிமா பைனான்சியர் கொலை
நெல்லை மாவட்டம் பரப்பாடி இளங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (வயது 36). இவர் சினிமாவுக்கு பைனான்சியராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். இவருடன் குடும்பம் நடத்தி வந்த துணை நடிகை சுருதி சந்திரலேகாவுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு பைனான்சியர் நண்பர் நெல்லை டவுனைச் சேர்ந்த உமாசந்திரன், நடிகை சுருதி சந்திரலேகா ஆகியோர் கூலிபடையினர் உதவியுடன் ரெனால்டு பீட்டர் பிரின்சை சென்னையில் வைத்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை பாளையங்கோட்டைக்கு கொண்டு வந்தனர். அங்கு ஆசிர்வாதநகரில் உள்ள ஒரு இடத்தில் புதைத்தனர். 4 மாதங்களுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியதை தொடர்ந்து காந்திமதிநாதன், ரபீக் உஸ்மான், ஆனஸ்ட்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர்.
பிணம் தோண்டி எடுப்பு
பாளையங்கோட்டை ஆசீர்வாதநகரில் புதைக்கப்பட்ட ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் உடலை நேற்று மாலை போலீசார் மற்றும் அதிகாரிகள் தோண்டி எடுத்தனர். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் மாதவன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பைனான்சியர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. அவரது கைகளும், கால்களும் கட்டப்பட்டு இருந்தன. உடல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்திலேயே டாக்டர்கள் செல்வகுமார், மணிவாசகம் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பைனான்சியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகை சிக்குகிறார்
கொலை தொடர்பாக துணை நடிகை சுருதி சந்திரலேகா, பைனான்சியர் நண்பர் உமாசந்திரன் ஆகியோரை தேடி தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு விரைந்துள்ளனர். நடிகை சுருதி சந்திரலேகா பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இன்னும் ஓரிரு நாளில் போலீசாரிடம் சிக்குவார் என்றும் தெரிகிறது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த கொலையில் வெளிவராத பல உண்மைகள் வெளியாகும் என்று தெரிகிறது.

No comments: