எம்.எச்.370 விமானம்: சந்திரிகாவின் கணவர் உருக்கம்
மாயமான மலேசிய விமானம் தொடர்பாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட துயரச் செய்தியில் இருந்து மீள்வதற்கு முயல்வதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சந்திரிகாவின் கணவர் நரேந்திரன் உருக்கமாக தெரிவித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8-ம் தேதி சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது. 16 நாட்கள் தேடுதலுக்குப் பின்னர், மாயமான விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரப்பூர்வமாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
விமானத்தில் பயணித்த 239 பயணிகளில் 5 இந்தியர்களும் அடங்குவர். இதில், விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா (50) என்பவரும் சென்றுள்ளார். இவர், சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ஆவார்.
சென்னை வேளச்சேரியில் வசித்த சந்திரிகா ஷர்மா, இன்டர்நேஷனல் கலெக்டிவ் இன் சப்போர்ட் ஆப் பிஷ்ஸ் ஒர்க்கர்ஸ் (ஐசிஎஸ்எப்) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றியவர்.
மலேசிய பிரதமரின் அறிவிப்புக்குப் பின், சந்திரிகாவின் கணவர் கூறுகையில், "என்னால் இந்தத் தகவலை நம்ப முடியவில்லை. இந்தச் செய்தியில் இருந்து மீள முயற்சிக்கிறோம். இந்த தருணம் ஒரு வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், சந்திரிகாவிற்கு அந்தப் பயணம் மிகுந்த வலிகளை தந்திருக்கக் கூடாது" என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
ஐ.நா. அமைப்பான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் மங்கோலியாவில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பசிபிக் நாடுகளுக்கான சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளவதற்காக அந்த விமானத்தில் சந்திரிகா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments: