Header Ads

துவரங்குறிச்சி அருகே இன்று காலை நின்ற லாரி மீது கார் மோதி மணப்பெண் தாய் உள்பட 5 பேர் பலி

மணப்பாறை: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்தவர்  செல்லதுரை(45). இவரது மனைவி கஸ்தூரி(40).  இவர்களது மகளுக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாவில் மாப்பிள்ளை பார்த்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டை பார்ப்பதற்காக நேற்று காலை செல்லதுரை, கஸ்தூரி, மகன் முத்து விநாயகம்(17) மற்றும் உறவினர்கள் 7 பேர் ஒரு டாடா சுமோ காரில் வாலாஜா சென்றனர். காரை  வடமலைசமுத்திரத்தை சேர்ந்த நல்லுராஜ்(25) என்பவர் ஓட்டினார். மாப்பிள்ளை வீட்டில் இருந்து நேற்று இரவு செல்லதுரை குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் கார் திருச்சியை கடந்து துவரங்குறிச்சி அருகே உள்ள சொரியம்பட்டி பிரிவு ரோட்டில் வந்தது. அப்போது, ரோட்டில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு லாரி பிரேக் டவுன் ஆகி நின்று கொண்டிருந்தது.

லாரி நிற்பதை கார் டிரைவர் கவனிக்காததால், லாரியின் பின்பக்கமாக கார் மோதியது. இதில், கார் நொறுங்கி லாரிக்கு அடியில் புகுந்தது. கார் டிரைவர் நல்லுராஜ், செல்லதுரையின் உறவினர் ஆறுமுகம்(28) ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர். காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மணப்பாறை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காரை உடைத்து வெளியே எடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு  துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் செல்லதுரையின் மனைவி கஸ்தூரி இறந்தார். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தபோது  கருப்பசாமி (49) உள்பட 2 ஆண்கள் இறந்தனர். இவர்கள் செல்லதுரையின் உறவினர்கள்.

காயமடைந்த செல்லதுரை, அவரது மகன் முத்துவிநாயகம், உறவினர்கள் சுப்பிரமணியன்(56), ஆதிலிங்கதேவர், சுப்பையா(75), ஆற்காடு பாலு(29) ஆகிய 6 பேர் படுகாயத்துடன் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மணப்பாறை டிஎஸ்பி முத்தரசு, துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

No comments:

Powered by Blogger.