பாராளுமன்ற தேர்தல்: கேரளாவில் களம் இறங்கும் சினிமா நட்சத்திரங்கள்
கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 10–ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இறங்கி உள்ளன.
அரசியல் அனுபவமும், சமூக சேவையில் ஈடுபாடு உள்ளவர்களையும் மட்டுமே தேர்தலில் களம் இறக்கி வந்த கேரள மாநிலத்தில் இப்போது அரசியல் அனுபவம் இல்லா விட்டாலும், மக்களிடம் பிரபலமாக இருக்கும் நபர்களை களம் இறக்கும் எண்ணம் அதிகரித்துள்ளது.
அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இம்முறை மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக திகழும் இன்னசென்ட்டை தேர்தலில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நடிகர் இன்னசென்ட்டை சந்தித்து பேசினர். அப்போது அவரை சாலக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டுமென கேட்டுக் கொண்டனர். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதையடுத்து காங்கிரஸ் கட்சியும் அதே பாணியில் மலையாள நடிகரை களம் இறக்க ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் மலையாள சினிமாவில் நடிகர் இன்னசென்ட்டுக்கு இணையாக காமெடியில் கலக்கி வருவதோடு, சின்னத்திரையிலும் பிரபலமாக இருக்கும் நடிகர் ஜெகதீசை அரசியலுக்கு இழுத்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர் ஜெகதீசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவருக்கும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெகதீசுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர், கொல்லம் தொகுதியில் களம் இறங்குவார் என தெரிகிறது.
இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.ஏ.பேபி போட்டியிட வாய்ப்பு உள்ளது. அவரை எதிர்க்க நடிகர் ஜெகதீசே சரியான நபர் என காங்கிரஸ் கருதுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியினர் கொல்லம் தொகுதி வேட்பாளராக எம்.ஏ. பேபியை அறிவித்தால் அங்கு அவரை எதிர்த்து நடிகர் ஜெகதீஷ் போட்டியிடுவார் என காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.
நடிகர்கள் இன்னசென்ட், ஜெகதீஷ் ஆகியோரை தொடர்ந்து மலையாள திரையுலகின் இன்னொரு பிரபல நட்சத்திரமான சுரேஷ்கோபியும் இம்முறை தேர்தலில் குதிப்பார் என தெரிகிறது.
சமூக சிந்தனையுடன் பல்வேறு பொது பிரச்சினைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்ற சுரேஷ்கோபி சமீபத்தில் குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.
இந்த தகவலை நரேந்திர மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டார். நரேந்திர மோடியும், சுரேஷ்கோபியும் சந்தித்து பேசும் படங்களும் வெளியானது. இதனால் வருகிற தேர்தலில் சுரேஷ் கோபி பாரதீய ஜனதா கட்சி சார்பில் கேரளாவில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இம்முறை கேரளாவிலும் பாரதிய ஜனதா தனது வெற்றி கணக்கை தொடங்கும் என்று தெரிகிறது.
No comments: