பெண் மென்பொறியாளர் தந்தையால் கௌரவக் கொலை செய்யப்பட்ட பரிதாபம்...
ஹைதராபாத்: ஜாதி விட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்த பெண் மென்பொறியாளர் தீப்தி என்பவரை கௌரவக் கொலை செய்தேன் என்று கொலையுண்ட பெண்ணின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற விவசாயினுடைய மகள் தீப்தி (26), தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் வேலை பார்த்த கிரண் குமார் என்பவரை கடந்த 2001ம் ஆண்டிலிருந்து காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தீப்தியின் பெற்றோர் எதிர்த்தனர்.
பெற்றோர்களின் கடும் எதிர்புகளுக்கிடையே தீப்தி-கிரண்குமார்ஜோடி கடந்த 21ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஆர்யசமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த தீப்தியின் பெற்றோர் அவர்களது திருமணத்தை ஏற்றுகொண்டதாக நாடகமாடி தம்பதியரை வீட்டிற்கு அழைத்தனர். பின்னர் அங்கிருந்து தீப்தியை மட்டும் தனியாக அழைத்துச் சென்ற அவர்கள், அவரது கணவரையும் நண்பர்களையும் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருக்குமாறு கூறியுள்ளனர். நேற்று காலை கிரண் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லை. இதனால் கிரண் தரப்பினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, தீப்தி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் பெற்றோரை கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கொலையுண்ட தீப்தியின் தந்தை, மகளின் கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்று கூறி கண்ணீர் விட்டார். தன் மனைவிக்கும் இக்கொலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.ஆனால் தந்தை ஒருவரால் மட்டுமே தீப்தியை கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகமடைந்தகாவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
No comments: