மாயமான மலேசியா விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்? : மலேசிய அரசு தகவல்
கோலாலம்பூர்: நடுவானில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது 2 பேர் விமானத்தை கடத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். விமானத்தின் தகவல் தொடர்பை முழுவதும் துண்டிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர் விமானம் கடத்தப்பட்டிருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக கூறியுள்ளார்.
விமானம் கடத்தலின் பின்னணி குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறிய அவர், விமானம் கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் தற்போது கிடைத்து வருவதாக கூறினார். ஆயினும் மாயமான விமானம் பற்றி இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விமானத்தின் தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட பிறகு, விமானம் மலேசிய தீபகற்பத்தில் பறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக விமானம் மாயமான விவகாரத்தில் கடத்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என அமெரிக்க அரசும் தெரிவித்தது. மாயமான விமானம் தென் சீன கடல் பகுதியில் இருக்கக் கூடும் என மலேசிய அரசு சந்தேகித்துள்ளது. இதனையடுத்து தென் சீன கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: