Header Ads

ராஜீவ் கொலை கைதிகள் 4 பேர் விடுதலையில் சட்டப்படி முடிவு: ஜெயலலிதா பேட்டி


தலைமை கழகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின்பு முதல்– அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க. தேர்தல் பணி தொடங்கி ஓராண்டு ஆகிறது. இப்போது வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டீர்கள். தேசிய கட்சிகள் இன்னும் கூட்டணி அமைக்க திண்டாடுகிறதே?

பதில்:– இதைப்பற்றி நான் கருத்து சொல்வதை விட அவர்களிடமே கேட்க வேண்டும்.

கே:– இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உங்கள் கூட்டணியில் உள்ளது. வேறு கட்சி வர வாய்ப்பு உள்ளதா?

ப:– எங்களுக்கு இந்த கூட்டணியே போதும்,

கே:– உங்கள் பிரசாரத்தில் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

ப:–எங்களது தாரக மந்திரமான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவையே முக்கிய குறிக்கோள். இது தவிர தேர்தல் அறிக்கையில் எங்கள் பிரசார நோக்கங்கள் பற்றி விரிவாக சொல்வோம்.

கே:– உங்கள் பிறந்த நாள் செய்தியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப:– அமைதி, வளம், வளர்ச்சி காண தமிழக மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் எங்களது தாரக மந்திரத்திற்கு ஒத்துழைப்பு கோருகிறேன்.

கே:– தேசிய அளவில் இடது சாரி உள்பட 16 கட்சிகள் சேர்ந்து ஒரு வலுவான அணி உருவாகி உள்ளதே. அவர்களுக்கு ஆதரவாக வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்வீர்களா?

ப:– எனது கவனம் தமிழ்நாடு பற்றிதான். தமிழ்நாடு, புதுவை உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது குறிக்கோள்.

கே:– பெரும்பாலான கருத்து கணிப்புகளில் 3–வது அணிதான் பெருமளவு வெற்றிபெறும் என்று தெரிவிக்கின்றனவே?

ப:– கண்டிப்பாக. தேர்தல் முடிந்ததும் அதை தெரிந்து கொள்வீர்கள்.

கே:– ராஜீவ் கொலை வழக்கில் மேலும் 4 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளதே?

ப:– இது எதிர்பார்த்துதான் அவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் என்பது தெரியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம்.

கே:– சீமாந்திரா மாநிலத்துக்கு தனி நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் தனி நிதி உதவி திட்டம் வேண்டும் என்று பீகார் உள்பட மேலும் சில மாநிலங்கள் கேட்டுள்ளது. நீங்களும் நிதி வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் முன் வைப்பீர்களா?

ப:– இந்த அரசிடமா? இந்த அரசு வெளியேறப் போகிற அரசு. புதிய அரசு ஜூன் மாதத்தில் அமையும். அப்போது பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

முன்னதாக முதல்– அமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் சுற்றுப்பயண விவரத்தை தினத்தந்தி நிருபரிடம் அளிக்கிறேன் என்று கூறினார். அதை நிருபர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

No comments:

Powered by Blogger.