Header Ads

திறமையான மேடைப்பேச்சாளர்கள் இருந்தும் குஷ்பு பேச்சை தி.மு.க.வினர் கைதட்டி ரசிக்கலாமா?: சிங்கமுத்து தாக்கு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழகஅரசின் 2014–15–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நடந்தது.

பழனிச்சாமிஎம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமைகழக பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து பேசியதாவது:–

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்துள்ளார். பொதுமக்களுக்கு வரிச்சுமை ஏற்படுத்தாத அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராத வகையில் சிறந்த பட்ஜெட்டை அளித்துள்ளதாக தமிழக மக்கள் பாராட்டி உள்ளனர். குறிப்பாக கல்விக்காக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக மாணவர்கள் உலகத்தரமான கல்வியை கற்க ஏற்பாடு செய்துள்ளார்.

பெண்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நமது தமிழக முதல்வர் பெண்கள் கருவுற்றது முதல் அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வருவதோடு பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டங்களையும் செய்து வருகிறார்.

கருணாநிதி மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் ஜெயிலில் இருந்து வந்தார். இந்த தொகையை கொண்டு தமிழகத்தின் 1 வருட பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம்.

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரர்கள் தி.மு.கவினர். தி.மு.க மேடைகளில் பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்தநிலையில் தற்போது குஷ்புவின் பேச்சை தி.மு.க தலைவர் கருணாநிதியும், மற்ற தலைவர்களும் கைதட்டி ரசிப்பது மிகவும் கேவலமான விஷயம்.

தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் போன்ற சரித்திர திட்டங்களை நிறைவேற்றி பசிப்பிணி மற்றும் நோயை தீர்த்து வருகிறார்.

கடந்த 1984–ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனக்கு பிறகு இந்தியாவை ஆள தகுதியும், திறமையும் நிறைந்த ஒரே பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அன்றே ஆருடம் கூறினார். அது இந்த மக்களவை தேர்தல் மூலம் நிறைவேறப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Powered by Blogger.