Header Ads

மதுரையில் பழிக்கு பழியாக மாணவர் வெட்டிக்கொலை

மதுரை வைகை ஆற்றுக்குள் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
மதுரை காமராஜர்புரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் மணிகண்டன் (வயது27). இவர் பெங்களூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் மதுரை வைகை ஆற்றின் தென்கரைக்கு சென்றபோது ஒரு ‘மர்ம’ கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து தெப்பக்குளம் போலீசில் மணிகண்டனின் அண்ணன் கணேஷ் புகார் தெரிவித்தார். அப்புகாரில் என் தம்பி வீட்டில் இருந்த போது சிலர் போனில் அழைத்துள்ளனர். வைகை ஆற்றிற்கு வந்ததும் அவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மதிச்சியம் போலீஸ் நிலைய உதவி கமிஷனர் துரைச்சாமி, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் தென்னவன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் கிடைத் துள்ளது. அதன் விபரம் வருமாறு:–
மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த மாட்டு பாண்டியும், மணிகண்டனும் படிக்கும்போதே நண்பர்களாக இருந்துள்ளனர். கூடல்புதூர் பகுதியை சேர்ந்த சில மாணவர்களும் இவர்களுக்கு நண்பர்களாக இருந்தனர். இதனால் அடிக்கடி இருவரும் கூடல் புதூர் பகுதிக்கு சென்று வந்தனர். அவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார்கள்.
இந்த நிலையில் மாட்டு பாண்டி, தனது நண்பரான மணிகண்டனிடமும் மற்றவர்களிடமும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கூடல் புதூர் பகுதியில் இருந்த மாட்டுபாண்டியை மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த மணிகண்டனை சிலர் சந்தித்து பேசியுள்ளனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் மணிகண்டனுக்கு போன் வந்தது. இதை தொடர்ந்து அவர் வைகை ஆற்றின் தென்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்றிருந்த 10 பேர் கொண்ட கும்பலுக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ‘மர்ம’ கும்பல் மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிகண்டன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஏற்கனவே மாட்டு பாண்டி கொலை வழக்கில் மணிகண்டன் சிக்கியதால் பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு வைகை ஆற்றுக்கு அழைத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.