Header Ads

விருகம்பாக்கத்தில் சினிமா எடிட்டர் மகன் கடத்தல்: போலீஸ் விசாரணை

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், ஏகாம்பரம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவர் 'கர்ணா', 'சலங்கை ஒலி', 'பத்ரகாளி' உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்து உள்ளார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

இவருடைய மனைவி சாந்தா. இவர்களது மகன்கள் வெங்கடேசன், பாலாஜி (வயது 29), திரவியம். இவர்களில் பாலாஜி விருகம்பாக்கம் பகுதியில் ஐஸ்கட்டிகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம், மார்க்கெட், கன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதற்காக சென்ற பாலாஜி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இரவு 10 மணியளவில் பாலாஜியின் செல்போனில் இருந்து அவரது அண்ணன் வெங்கடேசனின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், “நான் ஆபத்தில் இருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள்” என்று இருந்தது. 

அடுத்த சில நிமிடங்களில் அவரது தம்பி திரவியம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பாலாஜி, "நான் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது 4 பேர் என்னை காரில் கடத்தி வந்து விட்டனர். நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. கார் தற்போது ஆந்திரா நோக்கி செல்வது போல் உணர்கிறேன். என்னை கடத்தியவர்கள் இந்தி பேசுகிறார்கள். அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். என்னை காப்பாற்றுங்கள்" என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மீண்டும் பாலாஜியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது "சுவிட்ச் ஆப்" என்று வந்தது. இதனால் பதறிய அவர்கள் உடனடியாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாலாஜி கடத்தப்பட்டதாக கூறப்படும் செய்தி போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலாஜி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடத்தியவர்கள் ஏன் பாலாஜியிடம் செல்போனை கொடுத்து பேச வைக்க வேண்டும். தனது அண்ணனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய சிறிது நேரத்தில் தம்பியிடம் தன்னை கடத்தியதாக பேசி உள்ளார். 

மேலும் கடத்தியவர்கள் பணம் ஏதும் கேட்டு மிரட்டவில்லை. பாலாஜி கடன் பிரச்சினையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

எனவே கடன் பிரச்சினையை சமாளிக்க பாலாஜி தன்னை மர்மநபர்கள் கடத்தியதாக பொய் கூறி விட்டு கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? அல்லது உண்மையிலேயே அவர் பணத்துக்காகவோ அல்லது தொழில் போட்டியாலோ கடத்தப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Powered by Blogger.