Header Ads

பெண் என்ஜினீயர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்: கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் 30–க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில்தான் என்ஜினீயர் உமா மகேஸ்வரி பணியாற்றி வந்தார். கடந்த 13–ந் தேதி இரவு பணிமுடிந்து கேளம்பாக்கத்தில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்ற அவர் பின்னர் மாயமானார். இதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. 

இந்த நிலையில், நேற்று காலையில் சிப்காட் வளாகத்திலேயே புதர் மண்டிக் கிடந்த ஒரு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது உடல் சிதைந்து போயிருந்தது. அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்துதான் இறந்து கிடந்தது உமா மகேஸ்வரி என்பதை போலீசார் உறுதி செய்தனர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. 

உமா மகேஸ்வரியின் தந்தை பாலசுப்பிரமணியம் சேலம் ஆத்தூரை சேர்ந்தவர். தாய் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். மகளின் உடலை பெற்றோர் அருப்புக்கோட்டைக்கு எடுத்துச் சென்றனர். சிப்காட் வளாகத்தில் உள்ள பிரபல நிறுவனங்களில் பணியாற்றி வரும் இளம் பெண்களை கம்பெனிக்கு அழைத்து வருவதற்கும், வீட்டில் கொண்டு விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் செல்வது பணியாளர்களின் சொந்த விருப்பம். 

உமா மகேஸ்வரி தினமும், தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்றே மெயின் வாசலுக்கு வந்து பின்னர் பஸ் பிடித்து, மேடவாக்கத்துக்கு சென்று வந்துள்ளார். கடந்த 13–ந் தேதி பகல் 2 மணிக்கு வேலைக்கு வந்த இவர் 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போதுதான் இவரை யாரோ புதருக்குள் கடத்திச் சென்று கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கொன்றது யார்? என்பது மர்மமாக உள்ளது. காதல் ஆசை காட்டி யாராவது அவரை அழைத்துச் சென்று நாசம் செய்து கொன்றார்களா? இல்லை காமூகர்கள் யாராவது திட்டம் போட்டு அவரை தூக்கிச் சென்று கற்பழித்துச் கொன்றார்களா? என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சிப்காட் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக உமா மகேஸ்வரியின் நெருங்கிய தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும் சவாலாக இருக்கும் இக்கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர். 

இதற்கிடையே உமா மகேஸ்வரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு 10 நாட்களாக சிறுசேரி சிப்காட் வளாகத்திலேயே பிணம் கிடந்துள்ளது. ஆனால், அதை கவனிக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவரை ஐ.ஜி.மஞ்சுநாதன் சஸ்பெண்டு செய்துள்ளார்.

No comments:

Powered by Blogger.