Header Ads

தெகிடி..விமர்சனம்

நடிகர் : அசோக் செல்வன்நடிகை : ஜனனி ஐயர்இயக்குனர் : ரமேஷ்இசை : நிவாஸ் கே.பிரசன்னாஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணா
அசோக் செல்வன் ஒரு தனியார் டிடெக்டிவ் கம்பெனியில் வேலைக்கு சேருகிறார். கம்பெனி சொல்லும் நபர்களின் தகவல்களை திரட்டி தன் வேலையை திறம்பட செய்கிறார். 

அடுத்ததாக நாயகி ஜனனி ஐயரை பற்றி தகவல்களை திரட்டும்போது காதலில் விழுகிறார். ஜனனியிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல நினைக்கும் வேளையில் அவர் முதலில் பின்தொடர்ந்து தகவல் திரட்டிய நபர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. 

இதனால் கம்பெனியின் மீது சந்தேகம் அடைகிறார். அடுத்து தான் பின் தொடர்ந்து வந்த ஜனனி உயிருக்கு ஆபத்து இருப்பது தெரியவர அவரை காப்பாற்ற நினைக்கிறார். இதற்கெல்லாம் யார் காரணம்? ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று நம்மை சீட் நுனி வரை கொண்டு வருவதே தெகிடி. 

கதாநாயகன் அசோக் செல்வனுக்கு இதுதான் முதல் படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அழகாகவும் இருக்கிறார். துப்பறியும் காட்சிகளில் நடித்திருக்கவும் செய்கிறார். 

நாயகி ஜனனி அழகாக இருக்கிறார். அவருக்கு பொருத்தமான ஆடைகளை மட்டும் பயன்படுத்தியதால் இன்னும் அழகாக தெரிகிறார். காதல் காட்சிகளில் அவர் கண்ணே பாதி நடித்து விடுகிறது. 

போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்ற படங்களில் நடித்ததுபோலவே சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் செல்வனின் நண்பனாக வரும் காளியும் நன்றாக நடித்திருக்கிறார். சில நேரங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார். 

டிடெக்டிவ் அதிகாரியாக வரம் பிரதீப் நாயர், ஜெயக்குமார், அசோக் செல்வனின் ஆசிரியராக வரும் ராஜன் ஐயர் எல்லோருமே கிடைத்த வாய்ப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

இயக்குனர் ரமேஷுக்கு இதுதான் முதல் படம். பரபரப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். அதேபோல், இன்சூரன்ஸ் கம்பெனியில் நடக்கும் மோசடியை வைத்து புதிய களத்தில் படத்தை எடுத்திருப்பது தமிழ் சினிமாவிற்கு புதியவர்கள் வரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறார். 

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாசம் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு தெளிவு. காதல் காட்சிகளில் பயன்படுத்திய வண்ணம், மாண்டேஜ்களால் பாடலை ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை திரில்லர் படத்துக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாடல்களும் கேட்கும்படியாக இருக்கின்றன. 

படத்தின் முடிவு அதற்கு முன் நமக்கு ஏற்படுத்திய பரபரப்புக்கு ஈடு செய்யவில்லை. சின்ன ஏமாற்றம் வருவதை தடுக்க முடியவில்லை. அசோக் செல்வன் தன்னை ஏமாற்றியவர் என்று கோபத்தில் இருக்கும் ஜனனி, அவர் வந்து ஒரு ஐ லவ் யூ சொன்னதும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்வது சிரிப்பை வரவழைக்கிறது. 

மொத்தத்தில் ‘தெகிடி’ திகிலுக்கு பஞ்சமில்லை.

No comments:

Powered by Blogger.