Header Ads

தோனி சிக்சர்: சென்னை அணிக்கு 6வது வெற்றி: மீண்டும் வீழ்ந்தது டில்லி

புதுடில்லி: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ‘சூப்பர்’ வெற்றி பெற்றது. சிக்சர் மழை பொழிந்த ஸ்மித், 79 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு கைகொடுத்தார்.             
ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட லீக் போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. நேற்று டில்லியில் நடந்த போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.       
கார்த்திக் அபாரம்: டில்லி அணிக்கு குயின்டன் டி காக்(24), அதிரடியான துவக்கம் கொடுத்தார். கேப்டன் கெவின் பீட்டர்சனை (0), மோகித் சர்மா போல்டாக்கினார். மோகித் சர்மா, ஜடேஜா பந்துகளில் சிக்சர் அடித்த,  தினேஷ் கார்த்திக் (51), அரைசதம் அடித்து அவுட்டானார். அஷ்வின் சுழலில் சுக்லா, ‘டக்’ அவுட்டானார். முரளி விஜய் (35) நிலைக்கவில்லை. பின்வரிசையில் டுமினி, மோகித் சர்மா ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு ஜாதவ், இவரது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார். கடைசி 3 ஓவரில் இந்த ஜோடி 44 ரன்கள் சேர்க்க, டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. டுமினி (28), ஜாதவ் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.             
துவக்க நம்பிக்கை: சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஸ்மித், பிரண்டன் மெக்கலம் ஜோடி மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் கொடுத்தது. பார்னல் பந்தில் பவுண்டரி அடித்த மெக்கலம், ஷமி ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். உனத்கத் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த ஸ்மித், நதீம் பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார். இருப்பினும், முதல் 10 ஓவரில் 69 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இந்நிலையில், மெக்கலம் (32) கிளம்பினார்.             
ஸ்மித் அரைசதம்: பின் ஸ்மித்துடன் இணைந்த ரெய்னா, சுக்லா ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார். அசத்தலை தொடர்ந்த ஸ்மித், ஷமி மற்றும் சுக்லா பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி, இத்தொடரில் நான்காவது அரைசதம் எட்டினார்.             
திடீர் ‘டென்ஷன்’: மறுபுறம், உனத்கத் ஓவரில் 2 பவுண்டரி, பார்னல் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என, ரெய்னா விரட்ட, சென்னை அணிக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. ஷமி வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என, ஸ்மித் விளாசினார்.             
இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 44 பந்தில் 86 ரன்கள் சேர்த்த போது, ஸ்மித் 79 ரன்னுக்கு (51 பந்து, 8 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக, ‘டென்ஷன்’ ஏற்பட்டது.             
தோனி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. உனத்கத் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா, 1 ரன் எடுத்தார். பின் ‘பினிஷிங்கில்’ கைதேர்ந்த தோனி ஒரு சிக்சர், பவுண்டரி விளாச, சென்னை அணி 19.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.             
ரெய்னா (47), தோனி (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகனாக டுவைன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.
அதிக வெற்றி      
டில்லி அணிக்கு எதிராக அதன் சொந்தமண்ணில் விளையாடிய 5 போட்டிகளில், 4வது வெற்றியை (ஒரு தோல்வி), சென்னை அணி நேற்று பதிவு செய்தது.       
* சென்னை அணிக்கு எதிராக, மூன்றாவது முறையாக 175 அல்லது அதற்கும் மேல் ரன்கள் எடுத்தும் தோற்றது. இவை அனைத்தும் டில்லி சொந்தமண்ணில் நடந்தது சோகம்.       
24 சிக்சர்      
ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இதுவரை அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் சென்னையின் ஸ்மித் (24 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் பஞ்சாப்பின் மேக்ஸ்வெல் (19 சிக்சர்) உள்ளார்.       
ஜடேஜா ‘50’      
நேற்று முரளிவிஜயை அவுட்டாக்கிய சென்னை அணியின் ரவிந்திர ஜடேஜா, ஐ.பி.எல்., அரங்கில் 50 வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 85 போட்டிகளில், 168.2 ஓவர்கள் பவுலிங் செய்து, இந்த இலக்கை எட்டியுள்ளார்.       
* முதல் மூன்று இடங்களில் மும்பையின் மலிங்கா (112), ஐதராபாத்தின் அமித் மிஸ்ரா (99), கோல்கட்டாவின் வினய் குமார் (90) உள்ளனர்.

No comments:

Powered by Blogger.