Header Ads

என் கர்ப்பத்தை பற்றிதான் எல்லோருக்கும் கவலை..!’ –வித்யா பாலன்

வித்யா பாலனைச் சுற்றி நிறைய வதந்திகள் சமீபகாலமாக வலம் வருகின்றன. அவற்றை, அவரிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் விழாவுக்கு நீங்கள் விளம்பரத் தூதராக இருந்தும், நீங்கள் அங்கு செல்லவில்லையே, ஏன்?

கடந்த சில மாதங்களாகவே எனக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி சமீப காலத்தில் நான் நிறையப் பயணம் செய்துவிட்டேன். இந்நிலையில், இன்னொரு நீண்ட தூரப் பயணம் என்றால், அது என் உடலை கஷ்டப்படுத்திவிடும்.

சுஜோய் கோஸின் ‘துர்கா ராணி சிங்’ பட வாய்ப்பை நீங்கள் நிராகரித்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதே?

அது கஷ்டமான முடிவுதான். நான் மறுத்துக் கூறியதை அவராலும் நம்ப முடியவில்லை, என்னாலும் நம்ப முடியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு வலுவான காரணம் இருக்கிறது. திரைத்துறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாத விஷயம், ஆரோக்கியம். ஆனால் நான் இனிமேலும் என் உடல்நலத்தைக் கவனிக்காமல் இருக்க முடியாது. மோகித் சூரியின் ‘ஹமாரி அதுரி கஹானி’ படம் குறிப்பிட்ட காலத்துக்கு தள்ளிப் போனதால் அதை ஒத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் அதை நிராகரித்திருப்பேன்.

நாங்கள் நேரடியாகவே கேட்கிறோம், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?

என் கர்ப்பத்தை பற்றிதான் எல்லோருக்கும் கவலையா? இப்போதெல்லாம் ஆட்கள் என்னிடம் பேசும்போது என் வயிற்றையே பார்க்கிறார்கள். திரையுலகில் நடிகர்கள், நடிகைகள் மட்டும் ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும்? சமீபத்தில் ஓர் இளம் நடிகை வித்தியாசமாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக ஏதோ செய்திருக்கிறார். உடனே அவரை எல்லாம் வளைத்து வளைத்து விமர்சிக்கிறார்கள். ஏன், நடிகர்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லையா! கடவுள் விரும்பினால் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன். ஆனால் இப்போதல்ல. தாய்மைக்கு நான் இன்னும் மனரீதியாகத் தயாராகவில்லை. இன்னொரு ஜீவனுக்குப் பொறுப்பேற்பது என்பது கஷ்டமான விஷயம்.

ஆனால் நீங்கள் 30 வயதைக் கடந்துவிட்டீர்களே?

தாய்மைக்கும் வயதுக்கும் தொடர்பில்லை. பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்கள் இப்போது 30 நெருங்கும்வேளையில்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். காலையில் எழுந்து, குழந்தையைக் கவனித்துக்கொள்வது மன      நிறைவூட்டும் விஷயம் என்று என் திருமணமான தோழிகள் பலர் சொல்கிறார்கள்தான். ஆனால் அது கடினமான பணி. வேறெதுவுமே செய்ய முடியாத அளவுக்கு  நமது சக்தியெல்லாம் அதில் போய்விடும். குழந்தை வளர்ப்பு என்பது சமாளிக்க முடியாத பெரிய விஷயம்.

திருமணத்துக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைமுறை மாறி இருக்கிறதா?

தினமும் பெற்றோர், கணவர் வீட்டு வசதியையும் அனுபவிக்கிறேன். எனது சகோதரியின் குழந்தைகளோடு விளையாடுவது எனக்கு ஆனந்தமாயிருக்கிறது. ஆனால்,  சொந்தமாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள நான் இன்னும் தயாராகவில்லை. எனக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்களேன், பிளீஸ்!

நீங்கள் நடித்த கடைசி இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியபோது உங்களுக்கு எப்படியிருந்தது?

நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதே நேரத்தில், அந்தப் படங்கள் ஏன் தோல்வியைத் தழுவின என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. எந்த படம் வெற்றியடையும் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை. அந்த வெற்றி சூத்திரம் யாருக்கும் தெரிவதும் இல்லை.

No comments:

Powered by Blogger.