Header Ads

அன்புடன் அந்தரங்கம்!n

அன்புள்ள அம்மாவிற்கு — 
நான் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள்; எனக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே, ஒருவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோரிடம் என் விருப்பத்தை கூறினேன். அதை ஏற்க மறுத்தவர்கள், தற்போது, எனக்கு வேறு வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
என்னைப் பற்றி...
* மனசாட்சிக்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவள்.
* இரண்டு வருடங்களாக யோகா மற்றும் ஆழ்நிலை தியானம் செய்து வருகிறேன்.
* காதலை விட பெற்றோரே முக்கியம் என்று, நினைப்பவள்.
* சந்தர்ப்ப வசத்தாலோ, உணர்ச்சிக்கு மட்டுமோ முக்கியத்துவம் கொடுத்து, நான் காதலிக்கவில்லை. என் எண்ணத்தை மதித்து, என்னை உயிராக நினைக்கும் ஒரு நண்பரையே, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்துள்ளேன்.
* ஓடிப் போய் திருமணம் செய்வதில் விருப்பமில்லை.
என்னவரைப் பற்றி...
* சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், மாதம் பல ஆயிரம் சம்பாதிக்கிறார்.
* நாங்கள் பழகும்போதோ, வெளியிடங்களிலோ நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
* படிக்கும் காலத்தில், 'கல்லூரியை, 'கட்' அடிச்சுட்டு என்னை வந்து பார்க்கக் கூடாதா?' என்று நான் கேட்டால், 'பெத்தவங்க கஷ்டப்பட்டு பணம் கட்டி, படிக்க வைக்கும் போது, அவங்கள ஏமாத்தக் கூடாது...' என்றும், 'படிப்பில் பாதிப்பு வந்தால், என்னால் முன்னேற முடியாது. எவ்வளவு சீக்கிரம் ஒரு நல்ல நிலைக்கு வருகிறேனோ, அப்போது தான், உன்னை கைபிடிக்க முடியும்...' என்றும் கூறுவார்.
* கட்டி பிடிப்பது, முத்தமிடுவது கூட அவருக்கு பிடிக்காது. 'ஊரறிய திருமணம் செய்து, நீ எனக்கு சொந்தமாகும் போது தான். உன்னை தொடுவேன்...' என்பார். அந்த அளவிற்கு உடலை விட, மனதை விரும்புபவர்.
என் பெற்றோர் பற்றி...
* சமூகத்தினருக்காகவும், சொந்தக்காரர்களுக்காகவும் என் காதலை கைவிடும்படி கூறுகின்றனர்.
* 'நாங்கள் சொல்பவரை திருமணம் செய்து கொள்; இல்லையென்றால், வீட்டை விட்டு ஓடிப் போ...' என்கின்றனர். வேறு வழியின்றி, 'நான் செல்கிறேன்...' என்றால், 'நீ சம்மதிப்பாய் என்று நினைத்தோம்; இப்படி சொல்வாய் என, நினைக்கவில்லை...' என்று கூறி அழுகின்றனர்.
* உடன்பிறந்தவர்களோ, 'பெற்றோர் சொல்வதை கேள்; வீட்டை விட்டு போக வேண்டாம்...' என்கின்றனர்.
இந்த நிலையில் நான் என்ன செய்ய? மனதில் ஒருவரை நினைத்து, இன்னொருவருடன் குடும்பம் நடத்த என் மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சிக்கு கட்டுப்படும் நான், எப்படி இன்னொருவரின் வாழ்க்கையை வீணடிக்க முடியும்?
'நாலு பேர் என்னால் நன்றாக இல்லாவிட்டாலும், ஒருவர் கூட என்னால் கஷ்டப்படக் கூடாது...' என்கிறார் என் காதலர். முடிந்த அளவு, எனக்கு சமாதானம் சொல்லும் அவர், பின், அழுகிறார்.
இப்படிப்பட்ட நல்லவரை நான் எப்படி இழப்பது? அவர்கள் வீட்டிலும் சம்மதம் இல்லை. 'நாம் பிரிந்தால், சேரவே முடியாது; அதுவே பெற்றோரை பிரிந்தால், என்று வேண்டுமானாலும் சேரலாம்...' என்கிறார்.
'இரு தங்கைகளுக்கு திருமணமானதும் கல்யாணம் செய்து கொள்கிறோம்...' என்று கூறியும் சம்மதம் கிடைக்கவில்லை. இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறோம். நான் என்ன முடிவெடுப்பது? மற்றவர்களை மதிக்கும் பெற்றவர்கள், பிள்ளைகளின் மனதை ஏன் புரிந்து கொள்வதில்லை?
என் பிரச்னைக்கு உங்களின் அறிவுரை, ஆலோசனை வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு மகள்.

பிரியமான மகளே—
உன் உள்ளக் கிடங்கில் புதைந்து இருக்கும் கவலை தோய்ந்த கேள்விகளை, அடுக்கடுக்காய் கேட்டு, எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.
* உன் பிரச்னைக்கு உன்னவரையோ, உன் பெற்றோரையோ குறை சொல்ல முடியாது. உன் பெற்றோருக்கு சமூகம் சார்ந்த பயமும், தங்களின் மற்ற பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சமும், உனக்கு சம்மதம் தர தடுக்கலாம். நீ தான், அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துச் சொல்ல வேண்டும். உலகம் தெரிந்த பெண்ணாக உன்னை நீ நினைத்துக் கொண்டாலும், உன்னை பெற்று, வளர்த்த பெற்றோருக்கு நீ குழந்தை தானே... அவர்களுக்கு உன் விருப்பத்தை புரிய வைக்க வேண்டியது உன் கடமை.
* இது உன் வாழ்வு; யாரை மணம் செய்து கொள்ள வேண்டும் என, நீ தான் முடிவெடுக்க வேண்டும். அதாவது, உன்னவரையா அல்லது பெற்றோர் காண்பிக்க இருக்கும் முகம் தெரியாத நபரையா என்று.
* நீ எடுக்கும் எந்த முடிவும் உன் பெற்றோருக்கு எதிரானதாகவோ, அவர்களை அவமரியாதை செய்யும் செயல் என்று நினைக்காத வகையில் இருக்க வேண்டும். கோபப்படாமல், அதே சமயத்தில் அடங்கியும் போகாமல், அழுத்தமாக, திடமாக, உன் முடிவு குறித்து பேசு.
* உன்னால் எதுவும் முடியாத பட்சத்தில் தைரியமாக குடும்ப நல ஆலோசகரை அணுகி, விவரங்களை கூறி உனக்கும், உன் பெற்றோருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்து.
உனக்கு நல்லது நடக்க வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்...
— என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Powered by Blogger.